கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

575
@Getty Images

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான, 15 பேர் அடங்கிய இந்திய வீரர்கள் குழாம், இன்று (15) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் (BCCI) வெளியிடப்பட்டிருக்கின்றது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை வெல்ல எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக இந்தியா காணப்படுகின்றது.

உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் ஸ்மித், வோனர்

அடுத்த மாதம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும்..

இப்படியான ஒரு நிலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் உலகக் கிண்ணத்திற்கான இந்திய குழாத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்பதி ராயுடு, ரிஷாப் பான்ட் போன்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், சகலதுறை வீரரான ரவிந்திர ஜடேஜா உலகக் கிண்ணத்திற்கான இந்திய குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

இதேநேரம் உலகக் கிண்ணத்திற்கான இந்திய குழாத்தில் தமிழகத்தினை சேர்ந்த விஜய் சங்கரும், தினேஷ் கார்த்திக்கும் இடம்பெற்றிருக்கின்றனர். விஜய் சங்கர் மத்தியவரிசையில் துடுப்பாடும் சகலதுறை வீரர் என்பதோடு, தினேஷ் கார்த்திக் வழமையான விக்கெட்காப்பாளர் மஹேந்திர சிங் டோனிக்கு மேலதிகமான விக்கெட்காப்பாளராக இந்திய அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா, சிக்கர் தவான் ஆகிய வீரர்களுக்கு மேலதிகமாக இந்திய அணி KL. ராகுலிற்கும் உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பினை வழங்கியிருக்கின்றது.

இளம் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷாப் பான்ட் உலகக் கிண்ணத்திற்கான இந்திய குழாத்தில் இணைக்கப்படாதது தொடர்பில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளர் MSK. பிரசாத் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“ இந்த விடயம் தொடர்பில் நாம் நீண்ட நேரம் கலந்துரையாடியிருந்தோம். எமது நிலைப்பாட்டின் படி, (டோனிக்கு) காயம் ஏற்படும் போதே ரிஷாப் பான்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ஒருவரை அணியில் இணைப்பது என நாங்கள் முன்னர் ஒத்துக் கொண்டிருந்தோம். எனினும், இது (உலகக் கிண்ணத் தொடர்) முக்கியமான போட்டிகள் என்பதால் விக்கெட்காப்பு செய்வதும் ஒரு முக்கிய விடயமாக அமைந்தது. எனவே, நாம் தினேஷ் கார்த்திக்கை தெரிவு செய்திருக்கின்றோம். “

அண்மைய நாட்களில் இந்திய அணியில் விளையாடிவரும் அம்பதி ராயுடு உலகக் கிண்ணத்தின் போது நீக்கப்பட்டது தொடர்பிலும் பேசிய பிரசாத், “சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் (2017) பின்னர், (ராயுடு துடுப்பாடும் இடத்தில்) சில வீரர்களை வைத்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அந்தவகையில் ராயுடுவிற்கும் நாம் அதிக வாய்ப்புக்களை வழங்கியிருந்தோம். எனினும், இந்த இடத்திற்கு விஜய் சங்கர் பொருத்தமாக இருக்கின்றார். இதன்படி அவரை (விஜய் சங்கரை) நாம் 4ஆம் இலக்கத்தில் துடுப்பாட எதிர்பார்க்கின்றோம். அதோடு எம்மிடம் கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் போன்றோரும் இருக்கின்றனர். இந்த விடயங்கள் (ராயுடுவிற்கு) எதிரானவை இல்லை எனினும், (விஜய் சங்கருக்கு) ஆதரவாக இருக்கின்றது.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவர் பொறுப்பு யாருக்கு?

கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு இன்னும் 50 இற்கு குறைவான நாட்களே இன்னும்….

அதோடு பிரசாத் உலகக் கிண்ணத்திற்கான இந்திய குழாத்தில் இன்னும் சில பந்துவீச்சாளர்கள் பயிற்சிகளுக்காக மாத்திரம்  இணைக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டதோடு, அவர்களின் பெயர் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

மிகவும் திறமையான வீரர்களால் உலகக் கிண்ணத்திற்காக நிரப்பப்பட்டிருக்கும் இந்திய குழாத்தில் அதன் துடுப்பாட்டத்துறை ரோஹித் சர்மா, அணித்தலைவர் விராட் கோலி, சிக்கர் தவான், மஹேந்திர சிங் டோனி போன்றோரினால் பலப்படுத்தப்படுகின்றது.

இதேநேரம் இந்திய அணியின் பந்துவீச்சுத்துறைக்கு ஜஸ்பிரிட் பும்ரா, புவ்னேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா மற்றும் மொஹமட் சமி ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக பலம்சேர்க்க குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சுழல் பந்துவீச்சாளர்களாக வலுச் சேர்க்கின்றனர்.

உலகக் கிண்ணத் தொடரை ஜூன் மாதம் 05ஆம் திகதி தென்னாபிரிக்க அணியுடன் (செளத்எம்ப்டனில்) இடம்பெறும் போட்டியோடு ஆரம்பிக்கும் இந்திய அணி, உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக பங்களாதேஷ் (மே 25 – ஓவல்), நியூசிலாந்து (மே 27 – கார்டிப்) ஆகிய அணிகளுடன் பயிற்சி போட்டிகளிலும் விளையாடுகின்றது.

இந்திய குழாம் – விராட் கோலி (அணித்தலைவர்), ரோஹித் சர்மா, சிக்கர் தவான், விஜய் சங்கர், MS. டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், புவ்னேஸ்வர் குமார், KL. ராகுல், தினேஷ் கார்த்திக்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<