மாகாண கால்பந்து அணிகள் இடையில் இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ணம்

547
Independence Trophy 2022

இலங்கை கால்பந்து சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து தொடர் இம்மாதம் (ஜனவரி) 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் இலங்கையின் 8 மாகாணங்களைச் சேர்ந்த அணிகள் போட்டியிடவுள்ளதுடன், போட்டிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, மேற்கு, தென், மத்திய, சபரகமுவ, ஊவா மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 அணிகளுடன், வட மத்தி மற்றும் வட மேல் மாகாணங்களை இணைத்த வயப என்ற பெயரிலான அணி என மொத்தமாக 8 அணிகள் இந்த தொடரில் போட்டியிடவுள்ளன.

தொடரின் ஆரம்பப் போட்டி இம்மாதம் 25ஆம் திகதி குருனாகலை மாலிகாபிடிய மைதானத்தில் இடம்பெறும். ஆரம்பப் போட்டியில் கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாண அணிகள் மோதவுள்ளன. அதன் பின்னர் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் விதத்தில் பல மைதானங்களின் போட்டிகள் இடம்பெற்ற பின்னர், பெப்ரவரி 19ஆம் திகதி இரத்தினபுரி சீவெலி மைதானத்தில் இடம்பெறும் போட்டியுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவுபெறும்.

பின்னர், பெப்ரவரி 22ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் தொடரின் அரையிறுதிப் போட்டிகளும், பெப்ரவரி 28ஆம் திகதி இறுதிப் போட்டியும் இடம்பெறும்வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறும் மைதானங்கள் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

திறமையான இளம் வீரர்களை அடையாளம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டித் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் 21 வயதின்கீழ் வீரர்கள் ஆறு பேரை (குறைந்தது) தமது குழாத்தில் கொண்டிருக்க வேண்டும். அதில் குறைந்தது 3 வீரர்கள் போட்டியில் ஆட வேண்டும். அதேபோன்று, 19 வயதின்கீழ் வீரர்கள் மூன்று பேரையும் (குறைந்தது) தமது குழாத்தில் கொண்டிருக்க வேண்டும். அதில் குறைந்தது ஒருவர் கட்டாயம் போட்டியில் விளையாட வேண்டும்.

இந்த போட்டித் தொடருக்கான வீரர்கள் தெரிவு நாட்டின் பல பாகங்களிலும் அண்மையில் நடைபெற்று வந்தன. அவற்றின் நிறைவில் தற்போது வீரர்கள் தத்தமது அணிகளின் பயிற்றுவிப்பாளர்களின் கீழ் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுபர் லீக் தொடரில் ஆடும் அணிகளை பயிற்றுவித்தவர்களும், இலங்கையின் ஏனைய முன்னணி பயிற்றுவிப்பாளர்களும் இந்த சுற்றுத் தொடருக்காக மாகாண அணிகளுக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணிகளது பயிற்றுவிப்பாளர்கள்

  • வடக்கு – ரட்னம் ஜெஸ்மின்
  • கிழக்கு – மொஹமட் ஹசன் ரூமி
  • மேல் – சுமித் வல்பொல
  • தென் – ஷிரன்த குமார
  • மத்தி – ரூமி பக்கீர் அலி
  • சபரகமுவ – பசுல் ரஹ்மான்
  • ஊவா – மொஹமட் ஹம்ஸா
  • வயப – தேவசகாயம் ராஜமனி

போட்டி அட்டவணை

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<