நிதர்சனின் ஹெட்ரிக் கோலினால் வட மாகாண அணி வெற்றி

753
Mariyathas Nitharsan

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து லீக் தொடரில் புதன்கிழமை (02) இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் வட மாகாணம் மற்றும் மத்திய மாகாண அணிகள் வெற்றி பெற்றன.

இதில், வட மாகாண அணிக்காக மரியதாஸ் நிதர்சன் ஹெட்ரிக் கோல் பெற்றதுடன், ஊவா மற்றும் மத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டி மோதலுக்கு மத்தியில் இடம்பெற்று முடிந்தது.

மாகாண அணிகளுக்கு இடையிலான இந்த சுதந்திரக் கிண்ண சுற்றுத் தொடரின் முதல் கட்டப் போட்டிகள் குருனாகலையிலும், இரண்டாம் கட்டப் போட்டிகள் வட மாகாணத்திலும் (யாழ்ப்பாணம்) இடம்பெற்ற நிலையில் மூன்றாம் கட்டப் போட்டிகள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதன்கிழமை ஒரு போட்டி மட்டக்களப்பு வெபர் அரங்கிலும், மற்றைய போட்டி கந்தலாய் லீலாரத்ன விளையாட்டரங்கிலும் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தெற்கு எதிர் வடக்கு

மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டி ஆரம்பமாகிய முதல் 10 நிமிடங்களுக்குள் தென் மாகாண வீரர் சுபுன் தனன்ஜய அவ்வணிக்கு போட்டியின் முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனினும், அனுபவ வீரர் மரியதாஸ் நிதர்சன் போட்டியின் முதல் பாதியிலேயே மாற்று வீரராக மைதானத்திற்குள் வந்து 32ஆவது நிமிடத்தில் வட மாகாண அணிக்கான முதல் கோலைப் பெற்று, முதல் பாதியில் போட்டியை சமநிலையப்படுத்தினார்.

மீண்டும் இரண்டாம் பாதியில் சிறந்த பந்துப் பரிமாற்றத்துடனும் வேகமாகவும் விளையாடிய வட மாகாண அணிக்காக நிதர்சன் 53ஆம், 71ஆம் நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் பெற்று ஹெட்ரிக் கோலைப் பதிவு செய்தார். இது இந்த தொடரில் பதிவு செய்யப்பட்ட முதல் ஹெட்ரிக் கோல் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், போட்டி நிறைவில் வட மாகாண அணி இரண்டாம் பாதியில் பெற்ற மேலதிக இரண்டு கோல்களினால் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. தென் மாகாண அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.

முழு நேரம்: தெற்கு 1 – 3 வடக்கு

கொல் பெற்றவர்கள்

  • தெற்கு மாகாணம் – சுபுன் தனன்ஜய 7‘,
  • வடக்கு மாகாணம் – மரியதாஸ் நிதர்சன் 32‘, 53‘ & 71‘

ஊவா எதிர் மத்தி  

கந்தலாய் லீலாரத்ன விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதி எந்தவித கோல்களும் இன்றி நிறைவு பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 60 நிமிடங்கள் கடந்த நிலையில் ஊவா மாகாண இளம் வீரர் பிராஸ் ஸஹீர் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார். இந்த கோல் பெறப்பட்ட பின்னர் பிராஸ் எதிரணி வீரரை முறையற்ற விதத்தில் தாக்கி வீழ்த்தியமையினால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனினும், இதன்போது இரு அணி வீரர்களும் மோதலில் ஈடுபட, பின்னர் மைதானத்தில் இருந்த ஏனையவர்களும் மோதலில் ஈடுபட்டனர். இதனால் லீலாரத்ன விளையாட்டரங்கு ஒரு மோதல் களமாக மாறியது. இதன் காரணமாக நடுவரால் 25 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மிண்டும் போட்டி ஆரம்பமாகி 90ஆவது நிமிடத்தில் இருந்து, அதாவது உபாதையீடு நேரமாக சுமார் 27 நிமிடங்கள் வழங்கப்பட்டது. எனினும், மீண்டும் போட்டி ஆரம்பமாகியபோது இரு அணிகளில் இருந்தும் மேலும் 5 வீரர்கள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

உபாதையீடு நேரத்தில் மத்திய மாகாண அணி மிஹிரான் மற்றும் சிமாக் ஆகியோர் மூலம் இரண்டு கோல்களைப் பெற்றது. எனவே, போட்டி நிறைவில் மத்திய மாகாண அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம்: ஊவா 1 – 2 மத்தி

கோல் பெற்றவர்கள்

  • ஊவா மாகாணம் –  பிராஸ் ஸஹீர் 63‘
  • மத்திய மாகாணம் – M.I.M மிஹிரான் 90+10‘, A.K.M சிமாக் 90+28’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<