மேல் மாகாணத்தை வீழ்த்திய சபரகமுவ; தென் மாகாணத்திற்கு முதல் வெற்றி

303

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில் மேல் மாகாண அணியை வீழ்த்திய சபரகமுவ தொடரில் தோல்வி காணாத அணியாக திகழ்வதுடன், ரஜரட அணியை வீழ்த்திய தென் மாகாண அணி தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துகொண்டது.

சபரகமுவ எதிர் மேற்கு

ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காத சபரகமுவ அணி, தொடரில் பலமான அணிகளில் ஒன்றாக உள்ள மேல் மாகாண அணியை பதுளை வின்சண்ட் டயஸ் அரங்கில் எதிர்கொண்டது.

போட்டியின் 33ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற சபரகமுவ அணியின் தலைவர் சிபான், தடுப்பு வீரர்களைத் தாண்டி எதிரணியின் கோல் எல்லைவரை பந்தை எடுத்துச் சென்று உள்ளனுப்பிய பந்து எதிரணியின் தடுப்பு வீரரின் காலில் பட்டு வர, அதனை முஷ்பிக் கோலுக்குள் செலுத்தி சபரகமுவ அணியை முன்னிலைப்படுத்தினார்.

மீண்டும் இரண்டாம் பாதியின் 65 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் திசையில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் முஷ்பிக் அடுத்த கோலையும் பெற்று, அணியை இரண்டு கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

எனினும், போட்டியின் உபாதையீடு நேரத்தில் சபரகமுவ கோல் காப்பாளர் நுவன் கிம்ஹானவின் கைளில் இருந்து நழுவிய பந்தினைக் கொண்டு நவீன் ஜூட் மேல் மாகாண அணிக்கான முதல் கோலைப் பெற்ற போதும், போட்டி நிறைவில் சபரகமுவ அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் அவ்வணி தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ததுடன், 8 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கின்றது.

முழு நேரம்: சபரகமுவ 2 – 1 மேற்கு

கொல் பெற்றவர்கள்

  • சபரகமுவ மாகாணம் – மொஹமட் முஷ்பிக் 33‘, 68‘
  • மேல் மாகாணம் – நவீன் ஜூட் 90+4’

தெற்கு எதிர் ரஜரட

அதே மைானத்தில் இரவு நேரம் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் முதல் ஐந்தாவது நிமிடத்தில் சக வீரர் உள்ளனுப்பிய பந்தை சுபுன் தனன்ஜய ஹெடர் செய்து தென் மாகாண அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

தொடர்ந்து இரண்டாம் பாதி ஆரம்பமாகி 5 நிமிடங்களுக்குள் மைதானத்தின் மத்தியில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது உள்வந்த பந்தை கோலுக்குள் ஹெடர் செய்த சுபுன் தனன்ஜய போட்டியில் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்தார்.

எனினும், 85 நிமிடங்கள் கடந்த நிலையில் ரஜரட வீரர் எதிரணியின் கோல் எல்லையில் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டமையினால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை, அணியின் தலைவர் ஷரித்த ரத்னாயக்க கோலாக்கினார்.

அதன் பின்னர் போட்டியில் எந்த கோலும் பெறப்படாத நிலையில் மேலதிக ஒரு கோலினால் தென் மாகாண அணி வெற்றியை சுவைத்தது.

முழு நேரம்: தெற்கு 2 – 1 ரஜரட

கோல் பெற்றவர்கள்

  • தென் மாகாணம் – சுபுன் தனன்ஜய 5’, 49’
  • ரஜரட அணி – ஷரித்த ரத்னாயக்க 86’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<