சபரகமுவ, மேல் மாகாண அணிகளுக்கு முதல் வெற்றி

450

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து லீக் தொடரின் இரண்டு போட்டிகளில் மேல் மாகாண அணியும், சபரகமுவ மாகாண அணியும் வெற்றிகளைப் பெற்று தமது முதல் வெற்றியைப் பதிவு செய்துகொண்டன.

சபரகமுவ எதிர் தென்

யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள இலங்கை கால்பந்து சம்மேளன பயிற்சி நிலைய மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் முதல் வெற்றியைப் பதிவு செய்வதற்கான ஆட்டமாக இருந்தது. ஏற்கனவே, இரண்டு அணிகளும் தமது முதல் போட்டியை சமநிலையில் முடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் பெறாமையினால் முதல் 45 நிமிட ஆட்டம் சமநிலையில் நிறைவுற்றது. எனினும், இரண்டாம் பாதியின் 58ஆவது நிமிடத்தில் சபரகமுவ அணியின் 21 வயதின்கீழ் வீரர் முஷ்பிக் பெற்ற கோலினால், ஆட்ட நிறைவில் சபரகமுவ அணி 1-0 என வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம்: சபரகமுவ 1 – 0 தென்

கொல் பெற்றவர்கள்

சபரகமுவ மாகாணம் – AHM முஷ்பிக் 58‘

மேல் எதிர் மத்தி

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 43ஆவது நிமிடத்தில் சொஜோத் ஜசூக் மேல் மாகாண அணிக்கான முதல் கோலைப் பெற்று, முதல் பாதியில் அவ்வணியை முன்னிலைப் படுத்தினார்.

மீண்டும், இரண்டாம் பாதி ஆரம்பமாகி 4 நிமிடங்களில் மொஹமட் ஹஸ்மீர் மேல் மாகாண அணிக்கான அடுத்த கோலையும் போட்டு இந்த தொடரில் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து, மாற்று வீரராக வந்த நவீன் ஜூட் போட்டியின் உபாதையீடு நேரத்தில் மேல் மாகாணத்திற்கான மூன்றாவது கோலையும் பெற, போட்டி நிறைவில் 3-0 என அவ்வணி இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த இரண்டு அணிகளும் தமது முதல் போட்டியை சமநிலையில் முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: மேல் 3 – 0 மத்தி

கோல் பெற்றவர்கள்

மேல் – சொஜோத் ஜசூக் 43‘, மொஹமட் ஹஸ்மீர் 49‘, நவீன் ஜூட் 90+3‘

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<