தொடரும் சபரகமுவ அணியின் வெற்றிநடை; வட மாகாணத்தை மீட்ட நிதர்சன்

932
Sabaragamuwa vs Central & Northern vs Rajarata

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில் சபரகமுவ வீரர்கள் மத்திய மாகாணத்தை இலகுவாக வீழ்த்தியதுடன், நிதர்சனின் இறுதிநேர கோலினால் ரஜரட அணிக்கு எதிரான போட்டியை வட மாகாணம் சமநிலையில் முடித்துக் கொண்டது.

நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் இடம்பெற்றுவரும் அந்த தொடரில், இந்த கட்டத்திற்கான போட்டிகள் தென் மாகாணத்தில் இடம்பெறுகின்றன.

சபரகமுவ எதிர் மத்தி  

திங்கட்கிழமை (14) காலி மாவட்ட விளையாட்டு தொகுதியில் இடம்பெற்ற இந்த மோதலின் 15 நிமிடங்களின் பின்னர் சபரகமுவ அணிக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பின்போது அணித் தலைவர் சிபான் உள்ளனுப்பிய பந்தை பின்கள வீரர்கள் உரிய முறையில் தடுக்கத் தவற, ரஷான் போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

மீண்டும் முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில், சபரகமுவ அணியின் எல்லையில் இருந்து எதிரணியின் திசைக்கு அனுப்பிய பந்தை சிபான் பெற்று, மத்திய மாகாணத்தின் கோல் எல்லைவரை வேகமாக எடுத்துச் சென்று, அழகிய முறையில் கோல் காப்பாளருக்கு மேலால் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி, அணியை இரண்டு கோல்களால் முன்னிலைப்படுத்தினார்.

அதன் பின்னர் போட்டியில் எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில், 2-0 என வெற்றி பெற்ற சபரகமுவ அணியினர் 14 புள்ளிகளுடன் சுதந்திரக் கிண்ண தரப்படுத்தலில் முதல் இடத்தில் நீடிக்கின்ற அதேவேளை, அரையிறுதிக்கு முதல் அணியாக தெரிவாகியுள்ளனர்.

முழு நேரம்: சபரகமுவ 2 – 0 மத்தி

கோல் பெற்றவர்கள்

  • சபரகமுவ மாகாணம் – மொஹமட் ரஷான் 17‘, மொஹமட் சிபான் 45+1‘

வடக்கு எதிர் ரஜரட

திங்கிட்கிழமை அடுத்த ஆட்டமாக மாத்தறை கொடவில விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை.

எனினும், இரண்டாம் பாதியின் 57ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வட மாகாண வீரர் நிதர்சன் கோலாக மாற்றினார். எனினும், அடுத்த 20 நிமிடங்களில் வட மாகாண வீரர் கிளின்டன் மூலம் ஓன் கோல் முறையில் ரஜரட அணி தமக்கான கோலைப் பெற்றது.

தொடர்ந்து மாற்று வீரராக வந்த மொஹமட், 83 ஆவது நிமிடத்தில் ரஜரட அணிக்கான அடுத்த கோலைப் பெற்றார். எனவே, வெற்றியின் எதிர்பார்ப்புடன் விளையாடிக்கொண்டிருந்த ரஜரட அணிக்கு போட்டியின் உபாதையீடு நேரத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

ரஜரட கோல் எல்லைக்கு வெளியில் வைத்து அவ்வணியின் அசிகுரு் ரஹ்மான் பந்தை கையால் தடுத்தமையினால், அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், வட மாகாண அணிக்கு பிரீ கிக் வாய்ப்பும் கிடைத்தது. இதன்போது நிதர்சன் கோலின் வலது திசையினால் பந்தை செலுத்தி, ஆட்டத்தை 2-2 என சமப்படுத்தினார்.

முழு நேரம்: வடக்கு 2 – 2 ரஜரட

கோல் பெற்றவர்கள்

  • வடக்கு மாகாணம் – மரியதாஸ் நிதர்சன் 57’, 90+2’
  • ரஜரட அணி – கிளின்டன் 78’ (OG), N. மொஹமட் 83’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<