வடக்கு – கிழக்கு மோதல் சமநிலை; சபரகமுவ அணி முன்னிலையில்

784
Rajarata vs Sabaragamuwa & Northern vs Eastern

மாகாண அணிகள் மோதும் சுதந்திர கிண்ண கால்பந்து தொடரில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை பெற்றது. ரஜரட அணியை இலகுவாக வெற்றி கொண்ட சபரகமுவ அணி தொடரின் தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

தொடர்ந்து இடம்பெற்று வரும் சுதந்திர கிண்ண தொடரின் ஐந்தாவது கட்டத்திற்கான போட்டிகள் வியாழக்கிழமை (10) மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகின. ஒரு போட்டி நாவலபிடிய ஜயதிலக்க விளையாட்டரங்கிலும், அடுத்த போட்டி கண்டி போகம்பரை விளையாட்டரங்கிலும் இடம்பெற்றது.

ரஜரட எதிர் சபரகமுவ

போகம்பரை மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டு 5 நிமிடங்களில், ரஜரட பின்கள வீரர்கள் விட்ட தவரைப் பயன்படுத்தி, சபரகமுவ அணித் தலைவர் சிபான் போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

பின்னர், முதல் பாதியில் எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் இரண்டாம் பாதியில் 68ஆவது நிமிடத்தில் ஏற்கனவே, முன்னைய போட்டியில் இரண்டு கோல்களைப் பெற்ற இளம் வீரர் முஷ்பிக் சபரகமுவ அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றார்.

தொடர்ந்து, 75 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் கோல் எல்லைக்கு சற்று வெளியில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை இஜாஸ் நேராக கோலுக்குள் செலுத்தி, மூன்று கோல்களால் சபரகமுவ அணியை முன்னிலைப்படுத்தினார்.

அவ்வணிக்காக மாற்று வீரராக வந்த ரஷான், 85ஆவது நிமிடத்தில் அடுத்த கோலையும் பெற்றார். சபரகமுவ அணி பெற்ற இறுதி மூன்று கோல்களுக்குமான வாய்ப்பை அணித் தலைவர் சிபான் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், 89ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அசிகூர் ரஹ்மான் ரஜரட அணிக்கான முதல் கோலைப் பெற்ற போதும், ஆட்ட நிறைவில் 4-1 என்ற கோல்கள் கணக்கில் சபரகமுவ அணி வெற்றி பெற்று, சுதந்திர கிண்ண கால்பந்து தொடரின் புள்ளிப் பட்டியிலில் தற்போது முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

முழு நேரம்: ரஜரட 1 – 4 சபரகமுவ

கொல் பெற்றவர்கள்

  • ரஜரட – அசிகூர் ரஹ்மான் 89‘(P)
  • சபரகமுவ மாகாணம் – மொஹமட் சிபான் 5‘, மொஹமட் முஷ்பிக் 68‘, மொஹமட் இஜாஸ் 76‘, மொஹமட் ரஷான் 85‘

வடக்கு எதிர் கிழக்கு

ஜயதிலக அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலின் முதல் பாதியில் வட மாகாண அணி ஆதிக்கம் செலுத்தினாலும், இரண்டாம் பாதியில் கிழக்கு மாகாண அணியும் சிறந்த கோல் முயற்சிகளை மேற்கொண்டு விளையாடியது.

எனினும், இரண்டு அணிகளது கோல் காப்பாளர்களான் அமல் ராஜ் மற்றும் முர்ஷித் ஆகியோரின் சிறந்த தடுப்புக்கள் காரணமாக போட்டி நிறைவில் எந்த அணியும் கோல் பெறாமையினால் ஆட்டம் சமநிலையானது.

சபரகமுவ மற்றும் வட மாகாண அணிகள் இரண்டும் தலா 10 புள்ளிகளைப் பெற்றுள்ள போதும், பெறப்பட்ட கோல்களின் வித்தியாசத்தில் வட மாகாண அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

முழு நேரம்: வடக்கு 0 – 0 கிழக்கு

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<