வடக்கு, கிழக்கு அணிகளுக்கு வெற்றி

735

பதுளை வின்சன் டயஸ் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து லீக் தொடரின் போட்டிகளில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாண அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்தன.

இறுதியாக, தொடரின் மூன்றாவது கட்டப் போட்டிகள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் கந்தலாய் ஆகிய இடங்களில் இடம்பெற்ற நிலையில் நான்காம் கட்டத்திற்கான முதல் இரண்டு போட்டிகளும் வின்சன் டயஸ் விளையாட்டரங்கில் இடம்பெற்றன.

மத்தி எதிர் வடக்கு

ஞாயிற்றுக்கிழமை முதல் ஆட்டமாக மாலை இடம்பெற்ற இந்த மோதலின் முதல் பாதி கோல்கள் எதுவும் அற்ற பாதி ஆட்டமாக நிறைவடைந்தது.

எனினும், பின்னர் ஆரம்பமான இரண்டாம் பாதியின் 69ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து தயன்சன் வழங்கிய பந்தை மரியதாஸ் நிதர்சன் ஹெடர் செய்து வட மாகாண அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனினும், போட்டி நிறைவு வரையில் மேலதிக கோல்கள் எதுவும் பெறப்படாமையினால் வட மாகாணம் 1-0 என வெற்றி பெற்று, தொடரில் தமது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அதேபோன்று, தொடரில் 4 கோல்களைப் பெற்றுள்ள நிதர்சன் இதுவரையில் அதிக கோல்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

முழு நேரம்: மத்தி 0 – 1 வடக்கு

கொல் பெற்றவர்கள்

  • வடக்கு மாகாணம் – மரியதாஸ் நிதர்சன் 69‘

ஊவா எதிர் கிழக்கு

ஞாயிற்றுக் கிழமை இரவு ஆட்டமாக இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் 20 நிமிடங்களுக்குள் கிழக்கு மாகாண வீரர் லினஸ் கான் சிறந்த முறையில் போட்டியின் முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர் போட்டி நிறைவு பெறும்வரையில் மேலதிக கோல்கள் பெறப்படாமையினால் 1-0 என கிழக்கு மாகாணம் வெற்றி பெற்றது.

இது கிழக்கு மாகாண அணி தொடரில் பதிவு செய்த முதல் வெற்றியாகும்.

முழு நேரம்: ஊவா 0 – 1 கிழக்கு

கோல் பெற்றவர்கள்

  • கிழக்கு மாகாணம் – லினஸ் கான் 19’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<