முஷ்பிக்கின் கோலினால் தென் மாகாணத்தை வீழ்த்திய சபரகமுவ

396

மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் முதல் அரையிறுதியின் முதல் கட்டப் போட்டியில் (1st leg) சபரகமுவ அணி தென் மாகாண அணியை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற லீக் சுற்றின் நிறைவில் 7 போட்டிகளில் 5 வெற்றிகள் மற்றும் 2 சமநிலையான முடிவுகளுடன் 17 புள்ளிகளைப் பெற்ற சபரகமுவ அணி தரப்படுத்தலில் முதல் இடத்தைப் பெற்று அரையிறுதிக்கு தெரிவாகியது. அதேபோன்று, 7 போட்டிகளில் 3 வெற்றிகள், 2 சமநிலையான முடிவுகள் மற்றும் 2 தோல்விகளுடன் 11 புள்ளிகளைப் பெற்ற தென் மாகாண அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு தெரிவாகியது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை (25) காலி மாவட்ட விளையாட்டு தொகுதி மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்ப நிமிடங்களில் இரு அணிகளும் தடுமாற்றதை எதிர்கொண்டன.

நேற்றைய தினம் பெய்த மழையின் காரணமாக மைதானம் வழுக்கும் தன்மை கொண்டதாக இருந்தமை வீரர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

பின்னர் இரு அணிகளும் ஒரு நிலைக்கு வந்து கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் பின்கள வீரர்களைத் தாண்டி பந்தை கோலுக்குள் செலுத்துவதில் இரு அணிகளும் சவால் கண்டது.

குறிப்பாக, இந்த தொடர் முழுவதும் பிரகாசித்து வரும் சபரகமுவ அணித் தலைவர் மொஹமட் சிபானை, தென் மாகாண வீரர் விகும் அவிஷ்க சிறந்த முறையில் தடுத்து ஆடியமையினால் சபரகமுவ அணிக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவது சிரமமாக இருந்தது. இதனால் முதல் பாதி கோல்கள் எதுவும் இன்றி நிறைவடைந்தது.

தொடர்ந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் 60ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் இருந்து தன்னிடம் வந்த பந்தை சிபான் முஷ்பிக்கிடம் தட்டிவிட, முஷ்பிக் பின்கள வீரர்களைத் தாண்டி எடுத்துச் சென்ற பந்தை கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

தென் மாகாணத்தின் அனுபவ வீரர்களான சுபுன் தனன்ஜய மற்றும் தரிந்து தனுஷ்க ஆகியோர் போட்டியில் தமது முதல் கோலுக்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்ட போதும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

எனவே, போட்டி நிறைவில் முதல் கட்ட அரையிறுதியை 1-0 என வெற்றி கொண்ட சபரகமுவ அணியினர் இரண்டாம் கட்ட அரையிறுதியில் தமது சொந்த மைதானமான இரத்தினபுரி சீவெலி அரங்கில் மார்ச் மாதம் இரண்டாம் திகதி களம் காணவுள்ளனர்.

முழு நேரம்: சபரகமுவ 1 – 0 தெற்கு

கோல் பெற்றவர்கள்

  • சபரகமுவ மாகாணம் – மொஹமட் முஷ்பிக் 60‘

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<