இந்திய அணி தலைவராக மீண்டும் ரோஹித் சர்மா

308
BCCI

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதன்கிழமை (26) அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20i போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பெப்ரவரி 6,9,11 ஆகிய திகதிகளில் அஹமதாபத்திலும், T20i தொடர் பெப்ரவரி 16,18,20 ஆகிய திகதிகளில் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரோஹித் சர்மா தனது உடல்தகுதியை நிரூபித்து இருப்பதால் இந்தத் தொடர் மூலம் முழுநேர தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். உப தலைவர் கேஎல்.ராகுல் முதலாவது ஒருநாள் போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3ஆம் இலக்கத்தில் விராட் கோஹ்லியும், மத்திய வரிசை வீரர்களாக சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், தீபக் ஹூடாவிற்கு முதல் முறையாக இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்துள்ளது. விக்கெட் காப்பாளராக ரிஷப் பாண்ட் மட்டும் இடம்பெற்றுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத காரணத்தால் அவர்கள் அணியில் இடம்பெறவில்லை. தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் அசத்திய தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்காத நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

கடைசியாக 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலக கிண்ணத்தில் இணைந்து ஆடிய குல்தீப் யாதவ் – யுஸ்வேந்திர சாஹல் ஜோடி மீண்டும் ஒன்றாக இந்திய அணியில் விளையாடவுள்ளனர். மேலும், சுழல்பந்துவீச்சாளர்களாக வொஷிங்டன் சுந்தர் மற்றும் இளம் வீரர் ரவி பிஷ்னோய் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேகப் பந்துவீச்சாளர்களாக மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோருடன், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அபாரமாக பந்துவீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது பந்துவீச்சாளராகத் திகழ்ந்த ஆவேஷ் கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய ஒருநாள் அணி:

ரோஹித் சர்மா (தலைவர்), கே.எல் ராகுல் (உப தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, ரிஷப் பாண்ட் (விக்கெட் காப்பாளர்), தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.

இந்திய T20i அணி: 

ரோஹித் சர்மா (தலைவர்), கே.எல் ராகுல் (உப தலைவர்), இஷான் கிஷன், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பாண்ட், வெங்கடேஷ் அய்யர், தீபக் சாஹர், வொஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், மொஹமட் சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<