இந்தியா – நியூசிலாந்து கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் இன்று தொடங்கியது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் என்பதால் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வெள்ளி நாணயத்தால் நாணய சுழற்சி நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.
இந்தியா 6 துடுப்பாட்ட வீரர்கள், இரண்டு வேகப்பந்து மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நியூசிலாந்து 3 சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், மிஸ்ரா இடம்பெறவில்லை.
தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். நியூசிலாந்து அணி சார்பாக முதல் ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அதன்பின் ராகுல் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தார்.
அடுத்த ஓவரில் முரளி விஜய் தனது முதல் பவுண்டரியைப் பதிவு செய்தார். சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் வீசிய 11ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ராகுல், அந்த ஓவரின் கடைசிப் பந்தில் விக்கட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 42 ஆகக் காணப்பட்டது.
2-வது விக்கட்டுக்கு விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 31 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது. விஜய் 39 ஓட்டங்களுடனும், புஜாரா 34 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைச்சதம் அடித்தனர். புஜாரா 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் அவரிடமே பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை 2 விக்கட்டுகள் இழப்பிற்கு 154 ஓட்டங்களாக இருந்தது. 3-வது விக்கட்டுக்கு முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
விராட் கோலி விரைவாக ஓட்டம் சேர்க்கும் நோக்கத்துடன் விளையாடினார். 10 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் பந்தில் சோதியிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி 167 ஓட்டங்களில் 3 விக்கட்டுகளை இழந்தது.
4-வது விக்கட்டுக்கு முரளி விஜய் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் தேநீர் இடைவேளைக்கு சற்று முன் விஜய் 65 ஓட்டங்ககள் எடுத்த நிலையில் சோதி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். முதல்நாள் தேநீர் இடைவேளை வரை இந்தியா 59 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 185 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. ரகானே 12 ஓட்டங்களுடனும், ரோகித் சர்மா ஓட்டம் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
தேநீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியபோது, ரகானே 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து 6-வது விக்கட்டுக்கு ரோகித் சர்மாவுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 6-வது விக்கட்டுக்கு 52 ஓட்டங்கள் சேர்த்தது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 261 ஓட்டங்களாக இருக்கும்போது ரோகித் சர்மா 35 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சகா ஓட்டம் ஏதும் எடுக்காமல், போல்டின் இன்ஸ்விங்கர் பந்திற்கு ஸ்டம்பை பறிகொடுத்தார்.
மறுமுனையில் விளையாடிய அஸ்வின் 40 ஓட்டங்கள் சேர்த்தார். 9-வது விக்கட்டுக்கு களம் இறங்கிய மொகமது ஷமி போல்ட் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். தேநீர் இடைவேளைக்குப்பின் டிட்ரென்ட் போல்ட் அபாரமாக பந்து வீசினார். கடைசி விக்கட்டுக்கு ஜடேஜாவுடன் உமேஷ் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடியும் வரை விக்கட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஜடேஜா 11 ஓட்டங்களுடனும், உமேஷ் யாதவ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி சார்பில் போல்ட், சான்ட்னெர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்கள்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்