லங்கா T10 லீக் தொடருக்கான வீரர்கள் பதிவு ஆரம்பம்

Lanka T10 Super League 2024

133

இலங்கை கிரிக்கெட் சபையினால் முதன்முறையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த நிலையில், அங்குரார்ப்பண லங்கா T10 லீக் தொடருக்கான வீரர்கள் பதிவு நேற்று (15) மாலை 6.00 மணி முதல் ஆரம்பமாகியதுடன், வெளிநாட்டு மற்றும் இலங்கையின் முன்னாள் வீரர்கள் www.srilankacricket.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று ஒக்டோபர் 23ஆம் திகதி மாலை 6.00 மணி அல்லது அதற்கு முன் தங்கள் பெயர்களை பதிவுகளை மேற்கொள்ளுமாறு தொரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, இம்முறை லங்கா T10 லீக் தொடரில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ், கண்டி போல்ட்ஸ், கோல் மார்வல்ஸ், ஹம்பாந்தோட்டை பங்களா டைகர்ஸ், தம்புள்ளை பிரேவ் ஜாகுவார்ஸ் மற்றும் ஜப்னா டைட்டன்ஸ் என ஆறு அணிகள் விளையாடவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.  

அத்துடன், ஆறு அணிகள் விளையாடவுள்ள அங்குரார்ப்பண லங்கா T10 லீக் தொடரில் அதிகபட்சமாக 17 வீரர்கள் ஒரு அணியில் இணைத்துக் கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வீரர்களில் 7 வெளிநாட்டு வீரர்களும் சேர்க்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, T Ten Sports Management FZC, T TEN Global Sports FZE மற்றும் Innovative Production Group FZE ஆகிய நிறுவனங்கள் இணைந்து லங்கா T10 சுபர் லீக் கிரிக்கெட் தொடரை ஏற்பாடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<