கரீபியின் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிர், பாகிஸ்தானிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
41 வயதான இம்ரான் தாஹிர், கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் பங்கேற்பதற்காக லாகூர் சென்றிருந்தார்.
கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலினால் இந்தத் தொடர் பாதியில் இடைநிறுத்தப்பட்டதுடன், பாகிஸ்தானில் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு காரணமாக அவர் லாகூரில் முடங்கினார்.
பாகிஸ்தான் அணியில் நிராகரிப்பு ஏமாற்றம் அளிக்கிறது – இம்ரான் தாஹிர் வேதனை
இதுஇவ்வாறிருக்க, கொவிட் – 19 வைரஸின் தாக்கம் குறைவடையத் தொடங்கியதை அடுத்து சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானில் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.
இதனையடுத்து கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக இம்ரான் தாஹிர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) லாகூரிலிருந்து கரீபியன் தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதனிடையே, ரெசி வெண்டர் டர்சன், தப்ரீஸ் ஷம்ஸி, எண்ட்ரிச் நோர்ட்ஜே, ரில்லி ரூஸோ மற்றும் கொலின் இங்ரம் ஆகிய ஐந்து தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரர்களும் கரீபியன் தீவுகளுக்கு செல்வதற்கான விமானப்பயண ஏற்பாடுகளை உரிய காலத்தில் செய்யத் தவறியதன் காரணமாக இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக்கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Video – IPL எதிர் LPL…! எது கெத்து? |Sports RoundUp – Epi 125
இதில் குறிப்பாக, இந்தத் தொடரில் பங்கேற்கவிருந்த தென்னாபிரிக்கா நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு லண்டனிலிருந்து போட்டிகள் நடைபெறுகின்ற டிரினிடாட் மற்றும் டொபேகோ தீவுகளுக்குச் செல்வதற்கு பிரத்தியேகமான விமானம் ஒன்று போட்டி ஏற்பாட்டாளர்களால் தயார் செய்யப்பட்டிருந்தது.
எனினும், வீசா மற்றும் தென்னாபிரிக்கா நாட்டு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள தவறியதால் குறித்த ஐந்து வீரர்களுக்கும் இம்முறை தொடரில் பங்கேற்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இம்முறை கரீபியன் ப்ரீமியர் லீக் T20 தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை டிரினிடாட் மற்றும் டொபேகோவில் நடைபெறவுள்ளது.
இம்முறை தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டு வீரர்களும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க