அதி விரைவாக 1000 ஓருநாள் ஓட்டங்களை கடந்தவர்கள் வரிசையில் நேற்றைய (25) போட்டியின் மூலம் பாக். அணி வீரர் இமாம் உல் ஹக் இரண்டாமிடத்தை தக்கவைத்துள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி வருகின்றது. சுற்றுப்பயணத்தில் இரண்டாம் தொடரான ஒருநாள் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது.
முதல் மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடரில் தென்னாபிரிக்க அணி 2-1 எனும் அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரின் மூன்றாவது போட்டி நேற்று (25) செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வத் லூவிஸ் முறையில் 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இமாம் உல் ஹக்கின் சதம் வீண்; ஒரு நாள் தொடரில் தென்னாபிரிக்கா முன்னிலையில்
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து மொத்தமாக 317 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான 23 வயதுடைய இளம் வீரர் இமாம் உல் ஹக் அபாரமான முறையில் துடுப்பெடுத்தாடி 101 ஓட்டங்களை குவித்து ஒருநாள் அரங்கில் தனது 5ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்நிலையில் இமாம் உல் ஹக் 90 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஒருநாள் அரங்கில் 1000 ஓட்டங்களை கடந்தார். இவர் குறித்த 1000 ஓட்டங்களை 19 இன்னிங்சுகளில் கடந்து அதிவேகமாக ஒருநாள் அரங்கில் 1000 ஓட்டங்களை கடந்தவர்கள் வரிசையில் இரண்டாமிடத்தை தக்கவைத்துள்ளார்.
அத்துடன் பாக்கிஸ்தான் அணியின் மற்றுமொரு இடதுகை துடுப்பாட்ட வீரரான பக்ஹார் சமானே இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணியுடன் நடைபெற்ற போட்டியில் 18ஆவது இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களை கடந்தார்.
தற்போது இமாம் உல் ஹக் நேற்றைய (25) போட்டியின் மூலம் 19 இன்னிங்சுகளில் 1000 ஓட்டங்களை கடந்து அதிவேகமாக 1000 ஓட்டங்களை கடந்தவர்கள் வரிசையில் இரண்டாவது பாகிஸ்தான் வீரராகவும், சர்வதேச மட்டத்திலும் இரண்டாவது வீரராகவும் மாறியிருக்கின்றார்.
இவர் குறித்த சாதனையை 2017 ஒக்டோபர் 18ஆம் திகதி இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒருநாள் போட்டிகளில் தடம்பதித்து ஒரு வருடம் 99 நாட்களில் தன்வசப்படுத்தியுள்ளார்.
19 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இமாம் உல் ஹக் 5 சதங்கள், 4 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 1011 ஓட்டங்களை குவித்துள்ளார். 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 அரைச்சதங்களுடன் 1017 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இன்னும் டி20 சர்வதேச போட்டிகளில் இவர் அறிமுகம் பெறவில்லை என்றாலும், மிக விரையில் டி20 அணியில் இடம்பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<