சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் இமாத் வசீம் தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் விளையாடத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் முடிவடைந்த பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக ஆடிய இமாத் வசீம் சிறப்பாக செயல்பட்டதுடன், முதல்தான் சுல்தான்ஸ்; அணியுடனான இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.
இதனிடையே, எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இந்த வார ஆரம்பத்தில் அவருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இமாத் வசீம் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதற்கு தீர்மானித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் முடியும் வரை மாத்திரமே அவர் சர்வதேச கிரிக்கெட் களத்தில் நிலைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இமாத் வசீம் இறுதியாக கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான T20 போட்டியில் விளையாடியிருந்தார். இருப்பினும், கடந்த நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்திருந்தார்.
இமாத் வசீம் பாகிஸ்தானுக்காக 66 T20i போட்டிகளில் விளையாடி 131.70 ஸ்ட்ரைக் ரேட்டில் 486 ஓட்டங்களையும், 65 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<