மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தது முதல் இலங்கை அணி பல்வேறு நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்த நிலையிலேயே அங்கு வரலாற்று வெற்றியைப் பெற்றதாக இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர தெரிவித்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அஞ்செலோ மெதிவ்ஸ் ஆரம்பத்திலேயே நாடு திரும்பியது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டினால் அணித் தலைவர் தினேஸ் சந்திமாலை இழந்தமை, போட்டியின் இடைநடுவே முக்கிய வீரர்கள் உபாதைக்குள்ளானமை, சிரேஷ்ட வீரர்கள் அணியில் இடம்பெறாமை மற்றும் வீரர்களது ஒழுங்கீனமான நடத்தைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இலங்கை டெஸ்ட் அணி முகம் கொடுத்தது.
இவை அனைத்திற்கும் பின்னர் நேற்று முன்தினம் நிறைவுக்கு வந்த போட்டியை வெற்றி கொண்டமையினால் இலங்கை அணி புதிய பதிவை மேற்கொண்டதுடன், மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரை 1-1 என சமப்படுத்தியது.
லக்மால் அணியை முன்னின்று வழிநடத்தினார் – சந்திக்க ஹதுருசிங்க
பரபரப்பான மூன்றாவது டெஸ்ட்டை வென்று தொடரை சமநிலை செய்வதற்கு …
இதேநேரம், வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகத்தைக் கொடுக்கும் பார்படோஸ் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் துடுப்பெடுத்தாடுவதென்பது மிகவும் கடினமாக இருந்தாலும், முதலிரண்டு போட்டிகளிலும் விட்ட தவறை திருத்திக் கொண்டு இலங்கை வீரர்கள் இப்போட்டியில் மிகவும் அவதானத்துடன் விளையாடியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்த சமரவீர, இலங்கை அணியின் மத்திய வரிசை தொடர்பில் தன்னால் திருப்தியடைய முடியாது எனவும் குறிப்பிட்டார்.
எனினும், இலங்கை அணி பெற்றுக்கொண்ட இந்த வரலாற்று வெற்றியானது அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிற்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பிறகு அங்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு திலான் சமரவீர பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,
இரண்டாவது போட்டியின் பிறகு எமக்கு முகங்கொடுக்க நேரிட்ட இடையூறுகளுடன் ஒப்பிடும் போது இந்த வெற்றியின் அனைத்து கௌரவமும் வீரர்களைச் சென்றடைய வேண்டும். அதிலும் வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகத்தைக் கொடுக்கும் உலகின் முன்னிலை ஆடுகளங்களில் ஒன்றான இந்த மைதானத்தில் முதலிரண்டு விக்கெட்டுக்களையும் நான் பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை. ஏனெனில், இவ்வாறான ஆடுகளத்தில் துடுப்பாட்ட வீரர்களுக்கு புதிய பந்தை முகங்கொடுப்பதென்பது மிகப் பெரிய சவாலாகும். ஆனால் மத்திய வரிசை வீரர்கள் பிரகாசிப்பார்கள் என நான் எதிர்பார்த்திருந்தேன். எனினும், அவர்கள் ஆட்டமிழந்த விதம் குறித்தும், துடுப்பெடுத்தாடிய முறை குறித்தும் என்னால் திருப்தி அடைய முடியாது.
முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் எம்மை அனைத்து துறையிலும் தோல்வியடையச் செய்தனர். அதில் எமது வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாம் வெற்றியின் விளிம்புக்கு வந்தாலும் இடைநடுவே குறுக்கிட்ட சீரற்ற காலநிலையால் போட்டி சமநிலை அடைந்தது. எனினும், மூன்றாவது போட்டியில் எமது வீரர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடியிருந்தனர்.
எனினும், பார்படோஸ் ஆடுகளத்தில் நிலைத்துநின்று துடுப்பொடுத்தாடுவதென்பது மிகவும் கடினமான விடயம் தான். அதிலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிர்பாராத பல பந்துளை சந்திக்க வேண்டிவரும். எனவே அவ்வாறான பந்துகள் வீசப்படுகின்ற போது அதுதொடர்பில் பயப்படாமல் அடுத்த பந்தை முகங்கொடுப்பதற்கு மனதை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள் என வீரர்களுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுத்தேன். இதில் குசல் மெண்டிஸுக்கும் தில்ருவன் பெரேராவுக்கும் அனைத்து கௌரவங்களும் கிடைக்க வேண்டும்.
அதுமாத்திரமின்றி, பௌண்டரி எல்லைக்கு மேலாக வந்த பந்தை பிடிக்கச் சென்று உபாதைக்குள்ளாகிய குசல் ஜனித் பெரேராவுக்கு மீண்டும் துடுப்பெடுத்தாட முடியும் என உண்மையில் நான் நினைக்கவே இல்லை. அதிஷ்டவசமாக அவருக்கு தலையில் எந்தவொரு அடியோ அல்லது பலத்த காயங்களோ ஏற்படவில்லை. ஆனாலும், இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மாத்திரம் சாதகமான தொடராக அமைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.
டெஸ்ட் அரங்கில் 10,000 ஓட்டங்களைக் கடப்பதே கனவு என்கிறார் குசல் மெண்டிஸ்
மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் தொடரிற்கு முன் பல்லேகலை மைதானத்தில்…
இப்போட்டித் தொடர் முழுவதும் குசல் மெண்டிஸ் சிறப்பாக விளையாடியிருந்தார். 23 வயதுடைய வீரரொருவருக்கு இவ்வாறு விளையாடுவதென்பது இலகுவான விடயமல்ல. அதிலும் டெஸ்ட் போட்டிகளில் 190 ஓட்டங்களை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டுள்ளார். இரட்டைச் சதத்தை தவறவிட்டதை நான் அடிக்கடி அவருக்கு ஞாபகப்படுத்துவேன். ஏன், மேற்கிந்திய தீவுகளுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் உதவித் தலைவராக செயற்பட்டதும் அவர்தான். நாம் அவரிடம் இருந்து வந்த ஒருசில குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மனோநிலையை உயர்த்தி, சுதந்திரமாக விளையாடக்கூடிய சூழலொன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். அதன் காரணமாகவே அவர் தற்போது முன்னேற்றம் கண்டுள்ளார் எனவும் திலான் குறிப்பிட்டார்.
இறுதியாக 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்து ஒருசில கருத்துக்களையும் திலான் சமரவீர முன்வைத்திருந்தார்.
உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் பதினொரு மாதங்கள் உள்ளன. அந்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணிக்குத் தேவையான வீரர்களை இனங்கண்டு வருகின்றோம். அவர்கள் யார் என்பதை இப்போது கூறமுடியாது. எனினும், அடுத்த மார்ச் மாதம் நிறைவடைய முன் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி குறித்த விபரங்கள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி – அசேல விதான
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…