12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தற்சமயம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இத்தொடரில் லீக் போட்டிகள் அனைத்தும் நாளையுடன் (06) நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் லீக் தொடரின் 42 ஆவது போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று (04) லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.
2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடரின் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள இவ்விரு அணிகளும், தங்களுக்கான இறுதிப்போட்டியில் மோதின. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் ஆறுதல் வெற்றியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியால் ஒரு வெற்றியையும் பதிவு செய்ய முடிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானுக்கு எதிரான வெற்றியுடன் உலகக்கிண்ணத்தை நிறைவு செய்த மேற்கிந்திய தீவுகள்
கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 42ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான்…
நேற்றைய (04) போட்டியில் 312 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கான் அணிக்கு 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அவ்வணியின் இளம் விக்கெட் காப்பாளர் இக்ராம் அலிகில் துடுப்பாட்டத்தில் அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். இவர் 93 பந்துகளுக்கு முகங்கொடுத்து 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்த 86 ஓட்டங்கள் மூலமாக 27 வருட உலகக்கிண்ண சாதனை ஒன்றை படைத்துள்ளார் இக்ராம் அலிகில். 1992 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியின் லிட்டில் மாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 81 ஓட்டங்களை குவித்தார். இதுவே உலகக்கிண்ண வராலாற்றில் மிகக்குறைந்த வயதில் அதிக ஓட்டங்களை பெற்ற சந்தர்ப்பமாகும். டெண்டுல்கர் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெறும் போது அவருக்கு 18 வயது 318 நாட்களாகும்.
இதன் பின்னர் அதே உலகக்கிண்ண தொடரில் 18 வயது 323 நாட்களில் 84 ஓட்டங்களை குவித்தார். இதுவே நேற்று வரையில் உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இளம் வயதில் பெறப்பட்ட அதிகூடிய தனிநபர் ஓட்டங்களாக அமைந்திருந்தது.
ஆனால் நேற்று இக்ராம் அலிகில் 86 ஓட்டங்களை பெறும் போது அவருக்கு 18 வயது 278 நாட்களாகும். இதன் காரணமாக உலகக்கிண்ண வரலாற்றில் மிக இளம் வயதில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 27 வருடங்களின் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் இக்ராம் அலிகில் வீழ்த்தியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு செம்படம்பர் மாதம் 29 ஆம் திகதி பிறந்த இக்ராம் அலிகில் இவ்வருடம் (2019) மார்ச் மாதம் இடம்பெற்ற அயர்லாந்து அணியுடனான ஒருநாள் தொடரின் போது 18 வயதில் ஒருநாள் அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியினுடைய உலகக்கிண்ண குழாமில் ஆரம்பத்தில் இக்ராம் அலிகில் இடம்பெறவில்லை.
இலங்கைக்கு வருகை தரவுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி
தற்போது நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த…
ஆனால், விக்கெட் காப்பாளராக பெயரிடப்பட்ட ஸெஹ்ஷாட் அஹமட் உபாதை காரணமாக உலகக்கிண்ண தொடரிலிருந்து விலகிய நிலையிலேயே இக்ராம் அலிகில் குழாமில் உள்வாங்கப்பட்டார். இதுவரையில் 9 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இக்ராம் அலிகில் 148 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் நேற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக பெறப்பட்ட 86 ஓட்டங்களே அதிக பட்ச ஓட்டங்களாக காணப்படுகின்றது.
மேலும் கடந்த மார்ச் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆப்கான் அணிக்காக டெஸ்ட் அறிமுகத்தையும் இவர் பெற்றுக்கொண்டார். ஆனால் இன்னும் டி20 சர்வதேச போட்டி அறிமுகத்தை இக்ராம் அலிகில் பெறாத நிலையில், விரைவில் அறிமுகம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க