சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் விளையாட்டில் போட்டித் தன்மையினை அதிகரிக்க ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் என்னும் பெயரில் பல்வேறு நாடுகள் பங்குபெறுகின்ற டெஸ்ட் தொடர் ஒன்றை அறிமுகம் செய்திருக்கின்றது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளைக் கொண்டதாக இந்தப் பருவகாலத்திற்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் அமைகின்றது.
ஐ.சி.சி. இன். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குமான ஒருநாள் தொடர்கள் – ஒரு பார்வை
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்த…
உலகில் 12 நாடுகள் டெஸ்ட் அந்தஸ்தைப் கொண்டுள்ள போதிலும் 9 நாடுகள் மாத்திரமே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கின்றன.
இலங்கை | இந்தியா | அவுஸ்திரேலியா |
பங்களாதேஷ் | பாகிஸ்தான் | தென்னாபிரிக்கா |
நியூசிலாந்து | மேற்கிந்திய தீவுகள் | இங்கிலாந்து |
மொத்தமாக 9 அணிகள் உள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் அணியொன்று எஞ்சியிருக்கும் 8 அணிகளில் 6 அணிகளை பரஸ்பர ஒப்பந்தத்தில் தெரிவு செய்து அவற்றுடன் டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும்.
இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான தொடர்கள் ஒவ்வொன்றுக்கும் 120 புள்ளிகள் வழங்கப்படுவதோடு, புள்ளிகள் தொடரில் உள்ளடங்குகின்ற போட்டிகளுக்கு அமைய அணிகளுக்கு வழங்கப்படும்.
டெஸ்ட் தொடர் (போட்டிகளின் எண்ணிக்கை) | ஒரு போட்டிக்கு கொடுக்கப்படும் புள்ளிகள் | கைவிடப்படும் போட்டி ஒன்றுக்கு கொடுக்கப்படும் புள்ளிகள் | சமநிலை அடையும் போட்டிக்கு கொடுக்கப்படும் புள்ளிகள் |
2 | 60 | 30 | 20 |
3 | 40 | 20 | 13 |
4 | 30 | 15 | 10 |
5 | 24 | 12 | 8 |
பின்னர், புள்ளிகள் அட்டவணையில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இந்தப் பருவகாலத்திற்கான டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடவிருக்கின்றன.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி, லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவிருக்கின்றது.
இனி தற்போது நடைபெற்றுவரும் இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் என்ன நடக்கின்றது? இது பற்றிய எதிர்பார்ப்புக்கள் என்ன? அணிகள் முதலிடம் பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் என்ன என்பது தொடர்பில் சில விடயங்களைப் பார்ப்போம்.
இந்தியாவின் முதலிடம் பறிபோகுமா?
டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான நான்கு தொடர்களை விளையாடி 360 புள்ளிகளைப் பெற்ற இந்தியா, ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்தில் காணப்படுகின்றது.
டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான தமது கடைசி தொடரில் நியூசிலாந்திடம் வைட்-வொஷ் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி குறித்த தொடருக்காக கொடுக்கப்படும் 120 புள்ளிகளையும் முழுமையாக இழந்திருந்தது.
இவ்வாறு, இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக அடைந்த தோல்வி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் இடத்தினைக் கேள்விக்குறியாக்கும் விடயமாகவும் மாறியிருக்கின்றது. மறுவார்த்தையில் சொன்னால் டெஸ்ட் சம்பியன்ஷிப் சூடு பிடித்திருக்கின்றது எனக் கூற முடியும்.
உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் அசத்தும் ஹஷான் திலகரத்னவின் மகன் துவிந்து
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. ஒட்டுமொத்த உலகம்…
தற்போது, இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டு தொடர்கள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, இரண்டு தொடர்களுக்கும் வழங்கப்படும் 240 புள்ளிகளையும் பெறும் எனில், அவர்கள் டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக பெறும் மொத்தப் புள்ளிகள் 600 ஆக இருக்கும். இந்திய அணியும், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கும்.
ஆனால் இப்படியும் நடக்க முடியும்…
டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக 3 தொடர்களில் மாத்திரம் விளையாடி 296 புள்ளிகளோடு டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் காணப்படும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தமக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக எஞ்சியிருக்கும் 3 தொடர்களிலும் வெற்றி பெறுவார்கள் எனில் அவர்கள் அதற்காக 360 புள்ளிகளைப் பெற்றுக் கொள்வர். அதன்படி, 6 டெஸ்ட் தொடர்களுக்காகவும் அவுஸ்திரேலிய அணி பெறும் புள்ளிகள் 656 ஆக அமையும். இந்திய அணியின் முதலிடம் பறிபோகும்.
ஆனால், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இந்தியாவுடனும் ஒரு தொடரை விளையாட வேண்டியிருக்கின்றது. இவ்வாறான நிலையில், அவுஸ்திரேலியா தமக்கு எஞ்சியிருக்கும் ஏனைய இரண்டு தொடர்களில் வெற்றி பெற்றாலும் இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் அவர்கள் முதலிடம் பெறுவதில் செல்வாக்குச் செலுத்தும்.
எனவே, இந்திய அணி தமக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் எஞ்சியிருக்கும் தொடர்களில் அவுஸ்திரேலியா, மற்றைய அணியாக இருக்கும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கும் எதிராக வைட்-வொஷ் வெற்றி பெற்றால் மாத்திரமே முதல் இடத்தில் நீடிக்க முடியும்.
பழைய கிரிக்கெட் வீடியோக்களை ரசிகர்களுக்கு பரிசாக அளிக்கும் ஐ.சி.சி
சர்வதேச அளவில் அதிபயங்கரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக,…
இதேநேரம், டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான இரண்டு தொடர்களிலேயே விளையாடி 146 புள்ளிகளைப் பெற்றிருக்கும் இங்கிலாந்து அணியும் தமக்கு எஞ்சியுள்ள 4 தொடர்களில் வெல்லும் சந்தர்ப்பத்தில், அதற்காக வழங்கப்படும் 480 புள்ளிகளையும் எடுத்து மொத்தமாக 626 புள்ளிகளுடன் இந்தியாவை பின்தள்ளுவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.
இங்கிலாந்து இதற்காக இந்தியாவுடன் சேர்த்து தமக்கு எஞ்சிய டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்களில் சவால்தரக் காத்திருக்கும் இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளை வைட்-வொஷ் செய்ய வேண்டும்.
ஒருவேளை இந்திய அணியினர், தமக்கு எஞ்சியிருக்கும் டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று 600 புள்ளிகளைப் பெற்றாலும் இதுவரையில், டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இந்திய அணியுடனான தொடரில் மாத்திரம் விளையாடி புள்ளிகள் எதனையும் பெறாமல் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி தமக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக எஞ்சியிருக்கும் ஐந்து தொடர்களிலும் வெற்றி பெற்று மொத்தமாக 600 புள்ளிகளைப் பெற்றால், இந்திய அணிக்கு மேற்கிந்திய தீவுகள் மூலம் ஆச்சரியம் கிடைக்கும் சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.
இலங்கையின் நிலை என்ன?
தற்போதைய கணிப்புக்களை வைத்துப் பார்க்கும் போது, இலங்கை கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முதல் இடத்தினைப் பெறுவது சாத்தியமற்ற விடயமாகும். ஏனெனில், டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு டெஸ்ட் தொடர்களை விளையாடியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர் அதில் 80 புள்ளிகளை மாத்திரமே எடுத்திருக்கின்றனர். (ஏனெனில், இலங்கை இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பெறக்கூடிய அதிகூடிய புள்ளிகள் 560 மாத்திரமே) ஆனால், இலங்கை அணிக்கு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தினைப் பெற்று ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. அதற்கான சாத்தியப்பாடுகளை நோக்குவோம்.
அனுமான நிலை 1
இலங்கை அணி எஞ்சியிருக்கும் 4 தொடர்களிலும் வெற்றி பெற்று அதற்கான 480 புள்ளிகளையும் பெறுவார்கள் எனில், அவர்களுக்கு இந்தப் பருவகாலத்திற்கான டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் கிடைக்கும் மொத்தப் புள்ளிகள் 560 ஆக அமையும்.
ஆக இந்திய அணி முதல் இடத்தினைப் பெறும் போது அவர்கள் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை நிச்சயம் தோற்கடித்திருப்பார்கள். இந்நிலையில், அவுஸ்திரேலியா டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக பெறும் அதிகபட்ச புள்ளிகள் (எஞ்சியிருக்கும் இரண்டு தொடர்களில் முழுமையாக வென்றால்) 536 ஆக அமையும். எனவே, இலங்கை அணி எஞ்சியிருக்கும் நான்கு தொடர்களிலும் வெல்வதன் மூலம் இரண்டாம் இடத்திற்குச் செல்ல முடியும்.
இதற்காக இலங்கை அணி இங்கிலாந்து, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளை டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தோற்கடிக்க வேண்டும். இலங்கை இங்கிலாந்துடன் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக விளையாடவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே கொரோனா வைரஸ் பீதியினால் கைவிடப்பட்டிருந்தது.
ஆனால், இத்தருணத்தில் இலங்கை அணிக்கு நெருக்கடி தரக்கூடிய நாடாக பாகிஸ்தானும் இருக்கும். ஏனெனில், தற்போது 3 தொடர்களில் விளையாடி 140 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான் அணிக்கு (பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் உடனான டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான தமது மூன்றாவது தொடரினை இன்னும் முழுமையாக நிறைவு செய்யவில்லை.) இன்னும் எஞ்சியிருக்கும் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர்கள் மூலம் 560 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக பாகிஸ்தான் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுடன் வைட்-வொஷ் வெற்றிகளைப் பெற வேண்டும் என்பதோடு, தற்போது முழுமை அடையாது இருக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும்.
அதேநேரம் பாகிஸ்தான் நியூசிலாந்தினை வைட்-வொஷ் செய்யும் போது இலங்கை அணியுடன் டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான தொடரினை நிறைவு செய்த அவ்வணி இரண்டாம் இரண்டாம் இடத்திற்கான வாய்ப்பை தற்போது 3 தொடர்களில் விளையாடி 180 புள்ளிகளைப் பெற்றிருக்கின்ற போதிலும் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றுக்கும் இதே நிலைமையே காணப்படும்.
அனுமான நிலை 2
முன்னர் குறிப்பிட்டது போன்று இலங்கை எஞ்சியிருக்கும் 4 தொடர்களிலும் வெற்றி பெற்று அதற்கான 480 புள்ளிகளையும் பெறுவார்கள் எனில், அவர்களுக்கு இந்தப் பருவகாலத்திற்கான டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் கிடைக்கும் மொத்தப் புள்ளிகள் 560 ஆக இருக்கும்.
ஆனால், இந்திய அணி தமக்கு எஞ்சியிருக்கும் இரண்டு தொடர்களிலும் தோல்வியடையும் போது அவர்கள் எடுக்கும் மொத்தப்புள்ளிகள் 360 ஆகவே தொடர்ந்தும் இருக்கும். இவ்வாறான நிலையில், நாம் அனுமான நிலை 1 இல் குறிப்பிட்ட மாதிரி அல்லாது டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகள் அட்டவணையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறுவதனை அவதானிக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தின் போது இலங்கை அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அட்டவணையில் முதல் இடத்தினை பெறுவதற்கான வாய்ப்பும் உண்டு.
தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் ஆகியவற்றின் கதை
தென்னாபிரிக்கா டெஸ்ட்டில் சிறந்த அணி என்ற போதிலும் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் சிறந்த ஆரம்பத்தைக் காட்ட தவறியிருக்கின்றது. டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு தொடர்களில் விளையாடியிருக்கும் அவ்வணியினர் 24 புள்ளிகளை மாத்திரமே பெற்றிருக்கின்றனர்.
தமது முதல் டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியினால் வைட்-வொஷ் செய்யப்பட்ட தென்னாபிரிக்கா, டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக கடைசியாக இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றிக்காக தென்னாபிரிக்கா 30 புள்ளிகளை பெற்ற போதிலும் குறித்த தொடரின் போட்டி ஒன்றில் ஓவர்கள் தாமதமாக வீசிய குற்றச்சாட்டில் 6 புள்ளிகளை இழந்தது. இவ்வாறு அதிஷ்டம் குறைந்த நிலையில், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் வலம் வருகின்றது.
டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் எஞ்சிய தொடர்களை தென்னாபிரிக்கா விளையாடவுள்ள அணிகள் இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவையாக இருப்பதால் டெஸ்ட் சம்பியன்ஷிப் அவ்வணிக்கு சற்று கடினமாகவே இருக்கின்றது.
பங்களாதேஷை நோக்கும் போது டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மேற்கிந்திய தீவுகள் போன்று இதுவரை எந்தவொரு வெற்றியினையும் பதிவு செய்யாத அணியாக இருக்கின்றது. அவ்வணி டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டு தொடர்களை விளையாடியிருக்கும் நிலையில் அதற்கு எஞ்சியிருக்கும் போட்டிகள் அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளுடன் இருப்பதால் மிகப் பெரிய சவால் ஒன்று அவ்வணிக்கு இந்த டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் காத்திருக்கின்றது எனக் கூற முடியும்.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணை (27.03.2020)
நிலை | அணிகள் | தொடர்கள் | போட்டிகள் | புள்ளிகள் | |||||||
P | W | L | D | P | W | L | D | T | |||
1 | இந்தியா | 4 | 3 | 1 | 0 | 9 | 7 | 2 | 0 | 0 | 360 |
2 | அவுஸ்திரேலியா | 3 | 2 | 0 | 1 | 10 | 7 | 2 | 1 | 0 | 296 |
3 | நியூசிலாந்து | 3 | 1 | 1 | 1 | 7 | 3 | 4 | 0 | 0 | 180 |
4 | இங்கிலாந்து | 2 | 1 | 0 | 1 | 9 | 5 | 3 | 1 | 0 | 146 |
5 | பாகிஸ்தான் | 3 | 1 | 1 | 0 | 5 | 2 | 2 | 1 | 0 | 140 |
6 | இலங்கை | 2 | 0 | 1 | 1 | 4 | 1 | 2 | 1 | 0 | 80 |
7 | தென்னாபிரிக்கா | 2 | 0 | 2 | 0 | 7 | 1 | 6 | 0 | 0 | 24 |
8 | மே.இ. தீவுகள் | 1 | 0 | 1 | 0 | 2 | 0 | 2 | 0 | 0 | 0 |
9 | பங்களாதேஷ் | 2 | 0 | 1 | 0 | 3 | 0 | 3 | 0 | 0 | 0 |
P – விளையாடியவை
W – வெற்றி
L – தோல்வி
D – சமநிலை
T – கைவிடப்பட்ட போட்டிகள்
இந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் உங்களது அனுமானம் அல்லது எதிர்பார்ப்புக்கள் என்ன? கீழே கமெண்ட் செய்யுங்கள்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<