பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இலங்கை அணி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக நடைபெற்ற இந்தத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
இந்த நிலையில் மிர்பூர், பங்ளா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2 ஆவதும் கடைசியுமான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.
இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை 1 – 0 என்ற கணக்கில் இலங்கை தனதாக்கிக்கொண்டது. அத்துடன், இந்த வெற்றிக்கான 12 டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்ற இலங்கை அணி தொடரில் மொத்தம் 18 புள்ளிகளைப் பெற்றது.
- இலகு வெற்றியுடன் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை
- மெதிவ்ஸ், சந்திமால் ஆகியோரின் சதங்களோடு பலம் பெற்ற இலங்கை
- தைஜூல் இஸ்லாமிற்கு அபராதம் விதித்த ஐசிசி!
இதன்படி, இலங்கை அணி 55.56 புள்ளிகள் சதவீதத்துடன் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் கீழ் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, 3 வெற்றிகளுடன் 40 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி 75.0 புள்ளிகள் சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 71.43 புள்ளிகள் சதவீதத்துடன் தென்னாபிரிக்கா அணி 2 ஆவது இடத்திலும், 58.33 புள்ளிகள் சதவீதத்துடன் இந்திய அணி 3 ஆவது இடத்திலும் காணப்படுகிறது.
பாகிஸ்தான் அணி 52.38 புள்ளிகள் சதவீதத்துடன் பட்டியலில் 5 ஆவது இடத்தில் உள்ளது. நடப்பு சம்பியன் நியூசிலாந்து அணி 38.89 சதவீதத்துடன் 6 ஆவது இடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே 7 முதல் 10 ஆவது இடங்களைப் பிடித்துள்ளது.
இதேவேளை, இலங்கை அணி அடுத்து அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் தலா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<