இரண்டாவது பருவத்திற்கான ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தியிருக்கும் அவுஸ்திரேலியா, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் புதிய வெற்றியாளர்களாக நாமம் சூடிக் கொள்கின்றது.
அத்துடன் இந்த வெற்றி மூலம் அவுஸ்திரேலிய அணி கிரிக்கெட்டின் அனைத்துவகை வடிவங்களிலும் ICC இன் பல்நாட்டு அணிகளுக்கான தொடர்களில் சம்பியன் பட்டம் வென்றே ஒரே அணியாகவும் புதிய உலக சாதனை ஒன்றையும் நிலை நாட்டியிருக்கின்றது.
>>உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா களத்தடுப்பில்<<
ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கடந்த வியாழன் (07) லண்டனின் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் அவுஸ்திரேலியாவை துடுப்பாடப் பணித்தது. இதன்படி அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடி ட்ராவிஸ் ஹெட் (163) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (121) ஆகியோரது அபார சதங்களுடன் முதல் இன்னிங்ஸில் 469 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 04 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்தியா 296 ஓட்டங்களையே பெற்றது. இந்திய அணிக்காக 89 ஓட்டங்கள் எடுத்த அஜிங்கியா ரஹானே தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறினார். ஆஸி. அணியின் பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் 03 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து 173 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய அவுஸ்திரேலிய அணியானது இரண்டாம் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்கள் இழந்து 270 ஓட்டங்கள் எடுத்திருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்தியது. அவுஸ்திரேலிய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக விக்கெட்காப்பு வீரரான அலெக்ஸ் கேரி 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காது இருந்தார். இந்திய அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் பந்துவீச்சில் ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.
ஆஸி. அணியின் இரண்டாம் இன்னிங்ஸை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 444 ஓட்டங்களை அடைவதற்கு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இந்தியா 234 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது. இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் இம்முறை அதிக ஓட்டங்கள் எடுத்த துடுப்பாட்டவீரராக விராட் கோலி 49 ஓட்டங்களுடன் மாற, அவுஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளரான நதன் லயன் 04 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.
>>WATCH – இலங்கை அணியின் பந்துவீச்சு குழாம் சவால் கொடுக்குமா?<<
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினை அவுஸ்திரேலிய அணியின் ட்ராவிஸ் ஹெட் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவுஸ்திரேலிய அணி இப்போட்டியின் வெற்றியோடு ”Test Mace” என அழைக்கப்படும் டெஸ்டில் சிறந்த பெறுபேறினை காட்டுகின்ற அணிக்காக வழங்கப்படும் கௌரவிப்புக்கான கோலினையும் தமக்காக சொந்தமாக்கி கொள்கின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<