இரண்டாவது பருவகாலத்திற்கான ICC டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் ஆரம்பம்

286
ICC via Getty Images

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையில் இன்று (04) ஆரம்பமாகும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) இரண்டாவது பருவகாலத்திற்குரிய (2021-23) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகின்றது. 

T20I தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் வனிந்து ஹசரங்க!

இந்த தொடரில் ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய நாடுகளை தவிர டெஸ்ட் அந்தஸ்து உள்ள ஏனைய ஒன்பது அணிகளும் பங்கேற்கவிருப்பதோடு அதில் ஒவ்வொரு அணியும் தாம் பரஸ்பர ஒப்பந்தத்துடன் தெரிவு செய்து கொள்ளும் ஆறு அணிகளுடன் மூன்று தொடர்களை தமது சொந்த மண்ணிலும், மூன்று தொடர்களை எதிரணியின் மண்ணிலும் ஆட வேண்டும். 

அதன்படி இந்த தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி நடப்புச் சம்பியனாக உள்ள நியூசிலாந்து, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் மோதுகின்றது. எனினும், இந்த பருவகாலத்திற்கான ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் விளையாடவில்லை. 

இதில் இலங்கை அணியின் ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகள் இந்த ஆண்டின் இறுதியில் பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருடன் ஆரம்பிக்கின்றது. 

அதேநேரம், இந்த பருவகாலத்திற்கான ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில், கடந்த பருவகாலம் போன்று ஒரு தொடருக்கு வழங்கப்பட்டது போன்று 120 புள்ளிகள் வழங்கப்படப்போவது இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

ஷேர்ன் வோர்னுக்கு கொவிட்-19 தொற்று

எனவே, இதற்கு மாற்றமாக இந்த தொடருக்கான போட்டிகளில் விளையாடப்போகும் அணியொன்று வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் ஒரு போட்டிக்காக 12 புள்ளிகளை மாத்திரமே பெறும். இதேநேரம், இரு அணிகள் ஒரு போட்டியில் ஆடி அது கைவிடப்படும் (Tie) போது ஒவ்வொரு அணியும் தலா 6 புள்ளிகளையும், போட்டி சமநிலை (Draw) அடையும் போது இரு அணிகளும் தலா 4 புள்ளிகள் வீதமும் பெற்றுக்கொள்ளும். இதுதவிர, தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டு அணிகளை தெரிவு செய்ய அணிகள் பெறுகின்ற புள்ளிகள் சதவீத அடிப்படையில் கணிக்கப்படவிருக்கின்றது.  

இந்த ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் அதிக போட்டிகளினை ஆடவுள்ள அணியாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி காணப்படுவதோடு, அவ்வணி மொத்தமாக 22 போட்டிகளினை ஆடவிருக்கின்றது. அதேநேரம், பங்களாதேஷ் இந்த தொடரில் குறைவான போட்டிகளை ஆடும் அணியாக இருப்பதோடு அவ்வணி வெறும் 12 போட்டிகளில் மாத்திரம் ஆடவிருக்கின்றது. 

இரண்டாவது பருவகாலத்திற்கான ICC இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, 2023ஆம் ஆண்டின் மார்ச் மாதம் நடைபெறும் என குறிப்பிட்டிருக்கின்ற போதும் அது எங்கே நடைபெறும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<