T20 உலக சம்பியன்களாக நாமம் சூடிய இந்தியா

26

நடைபெற்று முடிந்திருக்கும் 2024ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாபிரிக்காவினை 07 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு 17 வருடங்களின் பின்னர் T20 உலகக் கிண்ணம் ஒன்றையும் வெற்றி கொண்டுள்ளது. 

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி வெற்றி

T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி பார்படோஸில் ஆரம்பமாகியது. இறுதிப் போட்டி வாய்ப்பினை தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முறையே ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றை அரையிறுதிகளில் வீழ்த்திப் பெற்றன. 

தொடர்ந்து நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில்  துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.   

தொடர்ந்து இந்திய அணிக்கு துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆரம்பம் அமையாத போதிலும் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி, அக்ஷார் பட்டேல் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தோடு அவ்வணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்கள் பெற்றது. 

இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் விராட் கோலி அரைச்சதம் பூர்த்தி செய்ததோடு 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 6 பெளண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் பெற்றார். அக்ஷார் பட்டேல் 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள் ஒரு பெளண்டரி அடங்கலாக 47 ஓட்டங்கள் எடுத்தார். 

தென்னாபிரிக்க பந்துவீச்சில் கேசவ் மஹாராஜ், அன்ட்ரிஜ் நோர்கியே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தென்னாபிரிக்கா அணியானது ஹெய்ன்ரிச் கிளாசனின் அரைச்சதத்தோடு வெற்றிக்காக போராடிய போதிலும் 20 ஓவர்கள் நிறைவில் அவர்களால் 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களையே பெற முடிந்தது. இதனால் அவ்வணி தோல்வியை தழுவியது. 

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் கிளாசன் 27 பந்துகளை முகம் கொடுத்து 5 சிக்ஸர்கள் 2 பெளண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் குயின்டன் டி கொக் 39 ஓட்டங்கள் பெற்றார். 

இந்திய அணியின் பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுக்களைச் சாய்த்ததோடு அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். 

போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோலி தெரிவாகினார். தொடர் நாயகன் விருது ஜஸ்பிரிட் பும்ராவிற்கு வழங்கப்பட்டது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<