தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருப்பதோடு, T20 உலகக் கிண்ணத் தொடரின் சம்பியன் பட்டத்தினை தொடர்ந்தும் தமக்காக தக்க வைக்கின்றது.
>> வனிந்துவின் சகலதுறை ஆட்டத்தால் ஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள அணி
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தொடரின் அரையிறுதிகளில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாபிரிக்காவும், தொடரின் நடப்புச் சம்பியனான அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தியும் தெரிவாகியிருந்தன.
மகளிர் T20 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டி நேற்று (26) கேப் டவுனில் ஆரம்பமாகியது. இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்த தென்னாபிரிக்காவின் மகளிர் கிரிக்கெட் அணியானது ஐ.சி.சி. இன் உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப் போட்டி ஒன்றில் விளையாடும் முதல் தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட கிரிக்கெட் அணியாக மாறியிருந்ததோடு, தென்னாபிரிக்காவிற்காக கிரிக்கெட் உலகக் கிண்ணம் ஒன்றினை வெல்வதற்கான முதல் வாய்ப்பினையும் பெற்றிருந்தது.
இதனை அடுத்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆஸி. மங்கைகள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்ததோடு 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றனர்.
ஆஸி. மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் பெத் மூனி தன்னுடைய 18ஆவது T20I அரைச்சதத்துடன் 53 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 74 ஓட்டங்கள் பெற்றார்.
மறுமுனையில் தென்னாபிரிக்க பந்துவீச்சில் சப்னிம் இஸ்மாயில் மற்றும் மேரிஷேன்னே கேப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 157 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு ஆரம்ப வீராங்கனைகளில் ஒருவரான லோரா வோல்வார்ட் சிறந்த ஆரம்பத்தினை வழங்கிய போதும், ஏனைய வீராங்கனைகள் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறியிருந்தனர்.
இதனால் தென்னாபிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது. உலகக் கிண்ணம் ஒன்றை வெல்வதற்காக கிடைத்த முதல் வாய்ப்பினையும் கோட்டைவிட்டது.
தென்னாபிரிக்க மகளிர் அணியின் வெற்றிக்காக போராடிய லோரா வோல்வார்ட் அரைச்சதம் பதிவு செய்ததோடு 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
மறுமுனையில் அவுஸ்திரேலிய மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜெஸ் ஜொனஸ்ஸன், டார்சி பிரவ்ன், ஏஷ்லி கார்ட்னர் மற்றும் மேனக் ஸ்ச்சூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்து தமது தரப்பினை மீண்டும் உலகக் கிண்ண சம்பியன்களாக மாற்றியிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகியாக ஆஸி. மகளிர் அணியின் பெத் மூனி தெரிவாக தொடர் நாயகி விருதானது ஆஸி. அணியின் ஏனைய வீராங்கனையான ஏஷ்லி கார்ட்னருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதேவேளை இந்த உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியிருக்கும் ஆஸி. மகளிர் அணி இதுவரை நடைபெற்றிருக்கும் 08 மகளிர் உலகக் கிண்ணத் தொடர்களில் 06ஆவது முறையாக T20 உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வென்று, அதிக T20 உலகக் கிண்ணங்களை வென்ற அணியாக தமது சாதனையை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
அவுஸ்திரேலியா – 156/6 (20) பெத் மூனி 74(53)*, சப்னிம் இஸ்மாயில் 26/2(4), மேரிசேன் கேப் 35/2(4)
தென்னாபிரிக்கா – 137/6 (20) லோரா வோல்வார்ட் 61(48), ஏஷ்லி கார்ட்னர் 20/1(4)
முடிவு – அவுஸ்திரேலியா 19 ஓட்டங்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<