ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தங்களுடைய முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி நிதானமாக ஓட்டங்களை பெற ஆரம்பித்த போதும், சீறான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
>>இரண்டு ஆண்டுக்கான ஒப்பந்தத்தை பெறும் மே.தீவுகள் வீரர்கள்!<<
முதல் 10 ஓவர்களில் 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி, அடுத்த இரண்டு ஓவர்களில் ஓட்டவேகத்தை அதிகரிக்க முற்பட்டது. எனினும் சமரி அதபத்து அணியின் 13வது ஓவரை வீசி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 84 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியாக பாகிஸ்தான் அணித்தலைவி பாத்திமா சனா 20 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை விளாச, அணியானது 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சில் சமரி அதபத்து, சுகந்திகா குமாரி மற்றும் உதேசிகா பிரபோதனி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணி சமரி அதபத்துவை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
சமரி அதபத்துவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி, குறிப்பிடத்தக்க துடுப்பாட்ட பிரகாசிப்புகளின்றி தடுமாற்றத்தை காட்டியது.
>>ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை<<
அணியை பொருத்தவரை அதிகபட்சமாக நிலக்ஷி டி சில்வா 22 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 85 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் மகளிர் அணியின் பந்துவீச்சில் சாடியா இக்பால் 3 விக்கெட்டுகளையும், பாத்திமா சனா, ஒமைமா சொஹைல் மற்றும் நஷ்ரா சந்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கை அணி தங்களுடைய அடுத்த போட்டியில் அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் சனிக்கிழமை (05) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<