ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்ற ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு எதிராக இன்று (12) நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டி அரையிறுதி வாய்ப்பை மேலும் அதிகரித்துக் கொண்டது.
மறுபுறத்தில் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக தோல்வியடைந்த இலங்கை மகளிர் அணி இம்முறை மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் ஒரு வெற்றியைக்கூட பெறாமல் ஏமாற்றத்துடனும், வெறுங்கையோடும் வீடு திரும்பவுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி, இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் A குழுவில் இடம்பிடித்துள்ள நியூசிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது. இம்முறை மகளிர் T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி 100 ஓட்டங்களைக் கடந்தது இதுவே முதல் முறையாகும். இலங்கை அணியில் அதிகபட்சமாக அணித்தiவி சமரி அத்தபத்து 41 பந்துகளில் 5 பௌண்டறிகளுடன் 35 ஓட்டங்களை எடுத்தார்.
- மகளிர் T20 உலகக்கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை தோல்வி
- இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை
- இலங்கை மகளிர் அணியை இலகுவாக வீழ்த்திய இந்தியா!
விஷ்மி குணரட்ன (8) உடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 22 பந்துகளில் 26 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை மேற்கொண்ட சமரி, ஹர்ஷிதா சமரவிக்ரம (18) உடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 60 பந்துகளில் 48 ஓட்டங்களைக் குவித்தார். ஆனால் அமெலியா கெர் வீசிய பந்தை ஸ்வீப் திசைக்கு அடிக்க முற்பட்டபோது அந்தப் பந்து விக்கெட்டைத் தாக்கியதால் சமரி அத்தபத்து துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
சமரி ஆட்டமிழக்க முன், 13.2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து வலுவான நிலையில் இருந்த இலங்கை அணி, அவர் ஆட்டமிழந்ததை அடுத்து மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து 115 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய லே காஸ்பெரெக் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 17.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஜோர்ஜியா பிலிமர் 44 பந்துகளில் 4 பௌண்டறிகளுடன் 53 ஓட்டங்களைப் பெற்று நியூசிலாந்து அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். அதேபோல, பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் அசத்திய அமெலியா கெர், ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களை எடுத்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சமரி அத்தபத்து மற்றும் சச்சினி நிசன்சலா ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து மகளிர் அணி நடப்பு மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பையும் அதிகரித்துக் கொண்டது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<