ஐந்து தடவைகள் டி20 உலகக்கிண்ண சம்பியனான அவுஸ்திரேலிய மகளிர்

181
Image Courtesy - ICC

இந்திய மகளிர் அணியுடன் இன்று (08) நடைபெற்ற ஐ.சி.சி மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 85 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்று மகளிர் டி20 உலகக்கிண்ண வரலாற்றில் ஐந்தாவது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய 7ஆவது மகளிர் டி20 உலகக்கிண்ணம் கடந்த 21ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகி இன்று நிறைவுக்கு வந்தது. இன்று (08) மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியும், அவுஸ்திரேலிய மகளிர் அணியும் பலப்பரீட்சை நடாத்தின. 

பிரியஞ்சனின் அரைச்சதத்தால் இங்கிலாந்துக்கு எதிராக வலுப்பெற்ற இலங்கை தரப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்குமிடையிலான……

இதுவரையில் நடைபெற்ற லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதி போட்டியிலும் ஒரு தோல்வியை கூட சந்திக்காத நிலையில் ஹர்மன்பிரீட் கௌர் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இதேவேளை அவுஸ்திரேலிய அணி முதல் போட்டியிலேயே இந்திய மகளிர் அணியிடம் ஒரேயொரு போட்டியில் மாத்திரம் வீழ்ந்த நிலையில் இறுதி போட்டியில் களமிறங்கியது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மெக் லன்னிங் தலைமையிலான அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி ஆரம்ப விக்கெட் சத இணைப்பாட்டத்தின் உதவியுடன்  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மகளிர் டி20 என்ற அடிப்படையில் குறித்த 184 ஓட்டங்கள் பாரிய ஓட்ட எண்ணிக்கையாக கருதப்பட்டது. 

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை பெத் மோனி ஆட்டமிழக்காது 10 பௌண்டரிகளுடன் 78 ஓட்டங்களையும், மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையும், விக்கெட்காப்பு வீராங்கனையுமான அலீஸா ஹீலி அதிரடியாக 5 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 75 ஓட்டங்களையும், அணித்தலைவி மெக் லன்னிங் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 4 ஓவர்களில் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், பூணம் யாதவ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 185 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அமர்க்களமானது. முதல் பவர்-பிளே (power play) 6 ஓவர்கள் நிறைவில் 32 ஓட்டங்கள் மாத்திரம் பெறப்பட்ட நிலையில் முக்கியமான 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. 

இரண்டு முக்கிய வீரர்களின் உபாதைகளினால் அவதியுறும் இலங்கை அணி

பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (06) நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய…..

பின்னர் அவுஸ்திரேலிய மகளிர் அணியின் சிறப்பான பந்துவீச்சினால் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்துவந்த இந்திய மகளிர் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்திய மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபடியாக தீப்தி ஷர்மா 33 ஓட்டங்களையும், வேதா கிரிஷ்ணமூர்த்தி 19 ஓட்டங்களையும், ரிச்சா கோஷ் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய முக்கிய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

அவுஸ்திரேலிய மகளிர் அணியின் பந்துவீச்சில் மேகன் ஷட் 3.1 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ஜெஸ் ஜொனஸன் 4 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், டெலிஸா கிம்மிண்ஸ், சோபி மோலினக்ஸ் மற்றும் நிகொலா கெரி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகியாக துடுப்பாட்டத்தில் அசத்திய  அவுஸ்திரேலிய வீராங்கனை அலீஸா ஹீலி தெரிவானார். இவ்வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய மகளிர் அணி ஐந்தாவது தடவையாக ஐ.சி.சி மகளிர் டி20 உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் (2018, 2020) கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 

இதுவரை நடைபெற்றுள்ள மகளிர் டி20 உலகக்கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணி 5 தடவைகளும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் தலா ஒவ்வொரு தடவையும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. அடுத்த மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் 2022ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ளது.  

86ஆவது புனிதர்கள் சமர் சமநிலையில் முடிவு

புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான 86 ஆவது…..

போட்டியின் சுருக்கம்.

அவுஸ்திரேலிய மகளிர் அணி – 184/4 (20) – பெத் மோனி 78 (54), அலீஸா ஹீலி 75 (39), தீப்தி ஷர்மா 2/38 (4), பூணம் யாதவ் 1/30 (4)

இந்திய மகளிர் அணி – 99 (19.1) – தீப்தி ஷர்மா 33 (35), வேதா கிரிஷ்ணமூர்த்தி 19 (24), ரிச்சா கோஷ் 18 (18), மேகன் ஷட் 4/18 (3.1), ஜெஸ் ஜொனஸன் 3/20 (4), டெலிஸா கிம்மிண்ஸ் 1/17 (4)

முடிவு – அவுஸ்திரேலிய மகளிர் அணி 85 ஓட்டங்களினால் வெற்றி   

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<