மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கைக்கு இலகுவான முதல் வெற்றி

3061

இங்கிலாந்தில் இவ்வருட நடுப்பகுதியில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ணத்தில் போட்டி போடப்போகும் மேலதிக அணிகள் யார் என்பதனை தீர்மானிக்கும் தகுதிகாண் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. அதில் NCC மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியொன்றில் அபாரமாக செயற்பட்ட இலங்கை மகளிர் அணி அயர்லாந்தினை 146 ஓட்டங்களால் வீழ்த்தி இத்தொடரில் தனது முதல் வெற்றியினை பதிவு செய்துள்ளது.

முன்னதாக, இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட இலங்கை மகளிர் அணியின் தலைவி இனோக்கா ரணவீர முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

நேற்றைய போட்டியில் இந்தியாவுடன் தோல்வியினை சந்தித்த இலங்கை அணி, இன்றைய போட்டியில் மல்ஷா ஷெஹானிக்கு பதிலாக சாமரி பொல்கம்பலவை பிரதீயிடு செய்திருந்தது.

சாமரி அத்தபத்து, எஷானி லொக்குசூரியகே ஆகியோருடன் தமது ஆட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகள் இருவரையும் அடுத்தடுத்து 24 மற்றும் 25 ஓட்டங்களினைப் பெற்றிருந்தபோது பறிகொடுத்தது. இந்த தருணத்தில் ஒரு தடுமாற்றத்தினை உணர்ந்த இலங்கை அணியின் வீராங்கனைகள், அயர்லாந்து பந்து வீச்சாளர்களினை சாமர்த்தியமாக எதிர்கொண்டனர்.

இதனால், மூன்றாவது விக்கெட்டுக்காக 72 ஓட்டங்கள் பகிரப்பட்டது. இலங்கையின் மூன்றாவது விக்கெட்டாக கேபி லூயிஸின் பந்து வீச்சில் சிக்கியிருந்த நிப்புனி ஹன்சிக்கா 30 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார். எனினும் இவருடன் ஜோடி சேர்ந்திருந்த பிரசாதினி வீரக்கொடி மறுமுனையில் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்த ஆட்டமிழக்காமல் நின்று பாடுபட்டார்.

இலங்கை அணி ஒரு வலுவான நிலையினை நோக்கி நகர்ந்த  தருணத்தில் பிரசாதினி 81 பந்துகளிற்கு 8 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து இலங்கை, சில விக்கெட்டுக்களை அடுத்தடுத்து பறிகொடுத்திருப்பினும் டிலானி மனோதரா ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்ட அரைச் சதத்துடன் (53), 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களினை குவித்துக்கொண்டது.

அயர்லாந்து அணியில், நேர்த்தியான பந்து வீச்சினை வெளிக்காட்டியிருந்த இடது கை சுழல் மங்கை இசோபெல் ஜோய்ஸ் இலங்கையின் 4 விக்கெட்டுக்களை 39 ஓட்டங்களிற்கு பதம்பார்த்திருந்தார்.

இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 240 ஓட்டங்களினை பெறுவதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி, ஆரம்பம் முதல் விக்கெட்டுக்களை பறிகொடுக்க ஆரம்பித்தது.

அவ்வணியின் முதல் மூன்று துடுப்பாட்ட வீராங்கனைகளும் ஓரிலக்க ஓட்டங்களுடன் வந்த வேகத்திலேயே மைதானத்தினை விட்டு வெளியேறினர். மீண்டும் தமது பந்து வீச்சாளர்களினை சரிவர பிரயோகித்த இலங்கை அணி, அடுத்தடுத்து அயர்லாந்தின் விக்கெட்டுக்களை வேட்டை ஆடியது.

இதனால், அயர்லாந்து அணி 36.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களினை மாத்திரம் பெற்று இலங்கை மகளிர் அணியிடம் படுதோல்வியினை சந்தித்தது.

அயர்லாந்தின் துடுப்பாட்ட வீராங்கனைகளில் இறுதி வரை போராட்டத்தினை காண்பித்திருந்த க்ளேர் செல்லிங்டன் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

இலங்கை மகளிர் அணியின் சார்பில் சிறப்பாக செயற்பட்டிருந்த சுழல் பந்து வீச்சாளரான இனோஷி பிரியதர்ஷினி 21 ஓட்டங்களிற்கு மூன்று விக்கெட்டுக்களையும், சிரிபாலி வீரக்கொடி மற்றும் இலங்கை மகளிர் அணித் தலைவி இனோக்கா ரணவீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்ட நாயகியாக, இனோஷி பிரியதர்ஷினி தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் அணி: 239/8 (50) – பிரசாதினி வீரக்கொடி 61(81),  திலானி மனோதரா 53(60), நிப்புனி ஹன்சிக்கா 30(78), இசோபெல் ஜோய்ஸ் 39/4(10), கேபி லூயிஸ் 41/2(8)

அயர்லாந்து மகளிர் அணி: 93 (36.1) க்ளேர் செல்லிங்டன் 36(37), இனோஷி பிரியதர்ஷினி 21/3 (10), இனோக்கா ரணவீர 16/2 (8), சிரிபாலி வீரக்கொடி 37/2 (10)

போட்டி முடிவுஇலங்கை மகளிர் அணி 146 ஓட்டங்களால் வெற்றி


 இந்தியா எதிர் தாய்லாந்து

CCC மைதானத்தில் நடைபெற்று முடிந்த குழு A இற்கான இப்போட்டியில், தமது முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர் ஒன்றில் விளையாடிய தாய்லாந்து மகளிர் அணி வெறும் 55 ஓட்டங்களிற்குள் மடக்கப்பட்டு இந்தியாவினால் அதிர்ச்சி ஊட்டப்பட்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 224 பந்துகள் மீதமிருக்க ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து போட்டியினை வெற்றி கொண்டது.

போட்டியின் சுருக்கம்

தாய்லாந்து மகளிர் அணி: 55 (29.1) சனிதா சுத்திருஅங் 12 (23), மான்ஷி ஜோசி  4/3 (5)

இந்திய மகளிர் அணி: 59/1 (12.4)

போட்டி முடிவுஇந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி


ஸ்கொட்லாந்து எதிர் தென்னாபிரிக்கா

MCA மைதானத்தில் நடைபெற்று முடிந்த குழு B இற்கான இப்போட்டியில், தென்னாபிரிக்க மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியினை சுவீகரித்துக்கொண்டது.

ஸ்கொட்லாந்து மகளிர் அணி: 142 (50) – கரி அண்டர்சன் 50 (119), சப்னீம் இஸ்மாயில் 30/3(10), அயன்போகா கக்கா 9/2 (10)

தென்னாபிரிக்க மகளிர் அணி: 143/4 (33.1) க்ளோய் டைரன் 45(40)*, த்ரிஷா செட்டி 35(56),  க்ரிஸ்டி கொர்டன் 39/2 (10)

போட்டி முடிவுதென்னாபிரிக்க மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி


பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ்

  1. சரவணமுத்து மைதானத்தில் குழு B இற்காக நடைபெற்ற இந்த போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை 67 ஓட்டங்களால் பாகிஸ்தான் மகளிர் அணி வீழ்த்தியது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் மகளிர் அணி: 227 (50) – றாபியா ஷாஹ் 34(33), ருமானா அஹ்மட் 40/3 (10)

பங்களாதேஷ் மகளிர் அணி: 160 (49.3) – நைகர் சுல்தானா 41(72), குலாம் பட்டிமா 28/3(9.3)

போட்டி முடிவுபாகிஸ்தான் மகளிர் அணி 67 ஓட்டங்களால் வெற்றி