தொடர் வெற்றிகளுடன் மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்த இலங்கை

1636
ICC Women's Qualifier

மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டித் தொடரின் குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறைவு பெற்றிருக்கும் இத்தருணத்தில், இன்று நடைபெற்று முடிந்த குழு நிலை போட்டியொன்றில் இலங்கை மகளிர் அணி, தாய்லாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இத்தொடரில் தனது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியினை பதிவு செய்துள்ளது.

எனவே, இந்த வெற்றியின் மூலம் இத்தொடரின் அடுத்த கட்ட ஆட்டமான சுப்பர் 6 போட்டிகளுக்கும் இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

இலங்கை மகளிர் அணிக்கு மற்றொரு இலகு வெற்றி

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இடம்பெறவிருக்கும் மகளிர் உலகக் கிண்ணத்தில் போட்டி போடப்போகும் மேலதிக அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் கிரிக்கெட் சுற்றுத்தொடர் தற்போது இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதில் MCA மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய குழு A இன் இப்போட்டியில், நாணய சுழற்சியினை தனதாக்கிக்கொண்ட தாய்லாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்து கொண்டது.

இதன்படி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த தாய்லாந்து, போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே தமது முதல் விக்கெட்டினை இலங்கை அணியின் இனோஷி பிரியதர்ஷினியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பறிகொடுத்தது. இதனால் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையாக களமிறங்கியிருந்த நட்டக்கன் சன்டம் 5 ஓட்டங்களுடன் ஓய்வறை நோக்கி நடந்தார்.

இதனையடுத்து, மந்த கதியிலேயே ஓட்டங்களை குவித்து தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்த தாய்லாந்து, இரண்டாவது விக்கெட்டுக்காக 46 ஓட்டங்களினை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து கொண்டது. அவ்வணியின் இரண்டாவது விக்கெட்டினை தொடர்ந்து ஏனைய விக்கெட்டுக்களும் இலங்கை மகளிர் அணியின் பந்து வீச்சிற்கு குறுகிய ஓட்ட இடைவெளிகளில் இரையாக, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களினை மாத்திரமே தாய்லாந்து மகளிர் அணி பெற்றுக்கொண்டது.

தாய்லாந்து மகளிர் அணியின் துடுப்பாட்டத்தில், அதிகபட்சமாக நட்டாயா பூச்சதம் 97 பந்துகளிற்கு ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 50 ஓட்டங்களினைப் பெற்றார். ஏனைய துடுப்பாட்ட மங்கைகளில் ஒருவரேனும் 20 ஓட்டங்களினை கூட தாண்டியிருக்கவில்லை.

இலங்கை மகளிர் அணியின் பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட அணித் தலைவி இனோக்கா ரணவீர, சிரிபாலி வீரக்கொடி மற்றும் எஷானி லொக்குசூரியகே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றிக் கொண்டனர்.

இதனையடுத்து, இலகு வெற்றி இலக்கான 123 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெறுவதற்காக மைதானத்திற்குள் விரைந்த இலங்கை மகளிர் அணி, 34.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கினை  அடைந்தது.

இலங்கை அணியின் வெற்றியிலக்கினை உறுதி செய்வதில் பெரும்பங்காற்றிய சாமரி பொல்கம்பொல 49 ஓட்டங்களினை பெற்று அரைச் சதத்தினை மயிரிழையில் தவறவிட்டார்.

பந்து வீச்சில், தாய்லாந்து மகளிர் அணி சார்பாக, சொர்னரின் டிப்போச், சுலிபோர்ன் லவோமி, சய்னம்மின் சேன்யா ஆகியோர் இலங்கை மகளிர் அணியில் பறிபோன மூன்று விக்கெட்டுக்களையும் ஆளுக்கு ஒவ்வொன்றாக பகிர்ந்து கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

தாய்லாந்து மகளிர் அணி 122/8 (50) நட்டாயா பூச்சசதம் 50(97), இனோக்கா ரணவீர 19/2(10), சிரிபாலி வீரக்கொடி 22/2 (10), எஷானி லொக்குசூரியகே 15/2(6)

இலங்கை மகளிர் அணி 123/3 (34.4) சாமரி பொல்கம்பல 49(94), நிப்புனி ஹன்சிக்கா 38(56), சய்னம்மின் சேன்யா  1/1(0.4)

போட்டி முடிவுஇலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி


இந்தியா எதிர் ஜிம்பாப்வே

p.சரவணமுத்துமைதானத்தில்இடம்பெற்றகுழு A இற்கான மற்றையபோட்டியில், பூணம்யாதவ்வின்மாயஜாலசுழலினால் 60 ஓட்டங்களிற்குள்ஜிம்பாப்வேமகளிர்அணியினைசுருட்டியஇந்தியா,இத்தொடரில்தனதுதொடர்ச்சியானநான்காவதுவெற்றியினைபதிவுசெய்துகொண்டுள்ளதுடன், குழு A இன்புள்ளிகள்அட்டவணையில்முதல்இடத்தினையும்பிடித்துக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே மகளிர் அணி 60 (28.5) மேரி ஏன் முசோன்டா 26(60), பூணம் யாதவ் 19/5 (7.5)

இந்திய மகளிர் அணி 61/1 (9)

போட்டி முடிவுஇந்திய மகளிர் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி


தென்னாபிரிக்கா எதிர் பபுவா நியூ கினியா

NCC மைதானத்தில் நடைபெற்று முடிந்த குழு B இற்கான இப்போட்டியில், பபுவா நியூ கினியா அணியினை வீழ்த்தியதன் மூலம் மகளிர் உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளின்  குழு நிலை ஆட்டங்கள் நான்கிலும் வெற்றி பெற்ற மற்றுமொரு அணியாக தென்னாபிரிக்க மகளிர் அணி மாறியது.

போட்டியின் சுருக்கம்

பபுவா நியூ கினியா மகளிர் அணி 76 (32.4) ப்ரென்டா டஉ 30(68), யொலானி பியூரி 18/2 (9)

தென்னாபிரிக்க மகளிர் அணி 77/0 (13.5) லோரா வொல்ட்வார்ட் 43(52)*

போட்டி முடிவுதென்னாபிரிக்க மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி


ஸ்கொட்லாந்து எதிர் பாகிஸ்தான்

கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்று முடிந்த குழு B இற்கான மற்றைய இப்போட்டியில்,  சனா மிர்ரின் அபார பந்து வீச்சினால் பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி வாகை சூடிக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

ஸ்கொட்லாந்து மகளிர் அணி 91 (39.1) கத்ரைன் பிரைஸ் 15(42), சனா மிர் 14/5 (10)

பாகிஸ்தான் மகளிர் அணி 94/4 (27.1) ஜவேரியா கான் 35 (42)*, கிர்ஸ்ட்டி கொர்டன் 29/4 (10)

போட்டி முடிவுபாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இத்தொடரின், குழு நிலை ஆட்டங்களில் வெற்றி தோல்விகளின் அடிப்படையிலான புள்ளிகள் அட்டவணையில் தத்தமது குழுக்களில் முதல் மூன்று இடங்களினைப் பெற்றுக்கொண்ட மகளிர் அணிகள் இத்தொடரின் அடுத்த கட்டமான, 15ஆம் திகதி ஆரம்பமாகும் சுப்பர் 6 போட்டிகளில் மோதிக்கொள்ளவுள்ளன.

புள்ளி அட்டவணை

குழு  A

மகளிர் அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை புள்ளிகள்
இந்தியா 4 4 0 0 8
இலங்கை 4 3 1 0 6
அயர்லாந்து 4 2 2 0 4
ஜிம்பாப்வே 4 1 3 0 2
தாய்லாந்து 4 0 4 0 0

குழு  B

மகளிர் அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை புள்ளிகள்
தென்னாபிரிக்கா 4 4 0 0 8
பாகிஸ்தான் 4 3 1 0 6
பங்களாதேஷ் 4 2 2 0 4
ஸ்கொட்லாந்து 4 1 3 0 2
பபுவா நியூ கினியா 4 0 4 0 0