எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள மகளிர் உலக கிண்ணத்திற்கான மேலதிக அணிகளை தெரிவு செய்யும் தகுதிகாண் போட்டிகளின் தொடர் இன்று கொழும்பில் ஆரம்பமாகியிருந்தது. இதில் இன்று நடைபெற்று முடிந்த போட்டியொன்றில் சவாலான பந்து வீச்சு மற்றும் சிறப்பான துடுப்பாட்டம் என்பவற்றினை வெளிப்படுத்தி இந்திய மகளிர் அணி இலங்கை அணியினை 114 ஓட்டங்களால் வீழ்த்தி  தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது.

மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் நாளை முதல் இலங்கையில்

P. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த குழு A இற்கான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுக்கொண்ட இந்திய அணியின் தலைவி மிதாலி ராஜ், முதலில் துடுப்பாட தீர்மானித்தார்.

இந்திய அணியின் முன்னிலை வீராங்கனைகள் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்தமையினால் ஓய்வு பெற்றிருந்த நிலையில் இப்போட்டியின் மூலம் சோனி யாதவ் இந்திய அணியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதேபோன்று, சகல துறை வீராங்கனையான மல்ஷா ஷெஹானி இலங்கை சார்பாக, முதல் முறையாக சர்வதேச மகளிர் ஒரு நாள் போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டார்.  

நாணய சுழற்சி முடிவுகளின் அமைவாக, தீப்தி சர்மா மற்றும் மோனா மெஷ்ரம் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தினை இந்திய அணி ஆரம்பித்தது. அவ்வணியின் முதல் விக்கெட் 9 ஓட்டங்களை பெற்றிருந்த போது, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் உதேசிக்கா பிரபோதினியினால் கைப்பற்றப்பட்டது. இதன் போது LBW முறையில் ஆட்டமிழந்த மோனா மெஷ்ரம் 6 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

இலங்கைக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாயினும், இந்திய அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகள் மற்றும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக, இலங்கை பந்து வீச்சாளர்களால் தொடர்ந்தும் இந்திய மகளிர் அணியினை கட்டுக்குள் வைக்க முடியவில்லை.

இந்தியாவினால், இரண்டாவது விக்கெட்டுக்காக 132 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான தீப்தி சர்மா அரைச் சதம் (54) கடந்ததுடன், மறுமுனையில் தேவிகா வைத்யா 11 பவுண்டரிகள் உள்ளடங்களாக 89 ஓட்டங்களினை விளாசினார்.

இவற்றுடன் சேர்த்து இந்திய அணித் தலைவி மிதாலி ராஜ் அதிரடியாக ஆடி ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களினை குவிக்க, இந்தியா மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களினைக் குவித்துக்கொண்டது.

பறிபோன நான்கு விக்கெட்டுக்களில் இரண்டினை 56 ஓட்டங்களினை கொடுத்து உதேசிகா பிரபோதினி இலங்கை சார்பாக கைப்பற்றியிருந்தார்.

பின்னர், வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 260 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெறுவதற்கு களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, நல்ல ஆரம்பத்தினையே தந்திருந்தது.

எனினும் பின்னர் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை, இலக்கை அடைய கடும் முயற்சி செய்தும் இந்திய அணியின் கடின பந்து வீச்சினால் மந்த கதியிலேயே ஓட்டங்களை குவித்தது. இதனால், இப்போட்டியில், 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களினை மாத்திரம் பெற்ற இலங்கை மகளிர் அணி தோல்வியினை தழுவியது.

தமது இன்னிங்சின் முதல் ஒன்பது ஓவர்களும் இலங்கை மகளிர் அணியினால் மெய்டென் (ஓட்டம் பெறாத) ஓவர்களாக ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மகளிர் அணி சார்பாக துடுப்பாட்டத்தில், ஹாஷினி பெரேரா ஏனையோரை விட அதிகமாக 34 ஓட்டங்களினை குவித்ததுடன், ஏனைய வீராங்கனைகளில் ஒருவரைத் தவிர யாரும் 30 ஓட்டங்கள் வரையேனும் தாண்டியிருக்கவில்லை.

கட்டுப்படுத்தும் பந்து வீச்சினை வெளிப்படுத்திய, இந்திய மகளிர் அணியின் இடது கை சுழல் வீராங்கனைகளான எக்தா பிஸ்ட் மற்றும் ராஜேஸ்வரி கயாக்வெட் ஆகியோர் கைப்பற்றப்பட்ட விக்கெட்டுகளில் தலா இரண்டு  வீதம் தம்மிடையே பகிர்ந்து கொண்டனர்.

போட்டி முடிவு இந்திய மகளிர் அணி 114 ஓட்டங்களால் வெற்றி


ஜிம்பாப்வே எதிர் அயர்லாந்து

குழு A இற்கான மற்றுமொரு போட்டியில், இளம் வீராங்கனையான கிம் கார்த்தின் சகல துறை ஆட்டத்துடன் அயர்லாந்து மகளிர் அணி  ஜிம்பாப்வேயினை 119 ஓட்டங்களால் வீழ்த்தியது.

கிம் கார்த் அரைச் சதம் கடந்து 63 ஓட்டங்களினை குவித்ததுடன், மூன்று விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

அயர்லாந்து மகளிர் அணி : 237/6 (50) கிம் கார்த் 63 (114), லாரா டெலானி 47 (69),ஜொசேபைன் ன்கோமோ 46/2(10)

ஜிம்பாப்வே மகளிர் அணி : 118  (37.5) அஷ்லீ ன்திரெயா 35 (50), கிம் கார்த் 24/3 (8)

போட்டி முடிவுஅயர்லாந்து மகளிர் அணி 119 ஓட்டங்களால் வெற்றி


பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

NCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 63 ஓட்டங்களால் பாகிஸ்தான் மகளிர் அணியினை தென்னாபிரிக்கா வீழ்த்தியது.  

தென்னாபிரிக்க மகளிர் அணியின் க்ளோய் டைரோன் 79 ஓட்டங்களினை அதிரடியாக ஆடி பெற்றுக்கொண்டதற்காக இப்போட்டியின் சிறப்பாட்ட வீராங்கனையாக தெரிவாகியிருந்தார்.

இப்போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியில் அறிமுகமான வெறும் 19 வயதேயான நஸ்ரா சந்து மூன்று விக்கெட்டுக்களை சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தென்னாபிரிக்க மகளிர் அணி : 258/9 (50) க்ளோய் டைரோன் 79(69), மிக்னோன் டு ப்ரீஸ் 40(56), நஷ்ரா சந்து 51/3(10)

பாகிஸ்தான் மகளிர் அணி : 195/6 (50) நயின் அபிதி 62(105), டேன் வான் நெய்க்கெர்க் 35/2 (7)

போட்டி முடிவு தென்னாபிரிக்க மகளிர் அணி 63 ஓட்டங்களால் வெற்றி


பங்களாதேஷ் எதிர் பபுவா நியூ கினியா

CCC மைதானத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் குழு B இற்கான மற்றைய போட்டியில் ஷர்மீன் அக்தர், பர்ஹானா ஹொக்கு ஆகியோர் அரைச்சதம் விளாச, பங்களாதேஷ் அணி 216 ஓட்டங்களினை பபுவா நியு கினியாவிற்கு வெற்றி இலக்காக வழங்கியது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினியா வெறும் 97 ஓட்டங்களிற்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து பங்களாதேஷ் மகளிர் அணியிடம் படுதோல்வியடைந்தது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் மகளிர் அணி : 215/6 (50) சர்மீன் அக்தர் 56(86), பர்ஹானா ஹொக்கு 51(72), ரவீனா ஓஆ 23/2 (10)

பபுவா நியூ கினியா மகளிர் அணி : 97 (32.1) பெளகே சிஅக்கா 32(41), கொனியோ ஓலா 29(38), ருமானா அஹ்மத் 13/2 (7)

போட்டி முடிவு பங்களாதேஷ் மகளிர் அணி 118 ஓட்டங்களால் வெற்றி