ஐசிசியின் செப்டம்பர் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் இலங்கையின் முன்னணி சுழல்பந்து வீச்சாளரான பிரபாத் ஜயசூரிய ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீர வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பாக செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி நேற்று முன்தினம் (08) வெளியிட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இலங்கை வீரர்களான கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய மற்றும் அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கமிந்து மெண்டிஸ் (இலங்கை)
செப்டம்பர் மாதத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கமிந்து மெண்டிஸ், 90.20 என்ற சராசரியில் 451 ஓட்டங்களைக் குவித்தார். இதில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்த அவர் 75 ஆண்டுகளில் மிக வேகமாக 1000 டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனைக்கு தொந்தக்காரர் ஆனார். அவர் வெறும் 8 டெஸ்டில், 13 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைக் கடந்த கிரிக்கெட் ஜாம்பவான் டொன் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார்.
அந்த காலகட்டத்தில், 08 டெஸ்ட் போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த உலகின் முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
- இன்னிங்ஸ் வெற்றியுடன் டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி
- இலங்கை அணியின் முழுநேர பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்!
- ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரருக்கு தடை
பிரபாத் ஜயசூரிய (இலங்கை)
இலங்கையின் இடது கை சுழல்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய நியூசிலாந்துக்கு எதிரான டெஸட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அணியின் தொடர் வெற்றியில் பெரும் பங்காற்றினார். குறித்த இரண்டு டெஸ்ட் வெற்றிகளிலும் தலா 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் உட்பட மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவர், 27.90 சராசரியில் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மேலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
டிராவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா)
அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த செப்டம்பர் மாதத்தில் அவர் ஐந்து T20i போட்டிகளில், 245.94 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 182 ஓட்டங்களை எடுத்தார். இதில் இங்கிலாந்துக்கு எதிராக 23 பந்துகளில் 59 ஓட்டங்களையும், ஸ்கொட்லாந்திற்கு எதிராக 25 பந்துகளில் 80 ஓட்டங்களையும் குவித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான T20i தொட ரை அவுஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் டிராவிஸ் ஹெட் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் டிராவிஸ் ஹெட் நான்கு இன்னிங்ஸ்களில் 82.66 சராசரியுடன் 248 ஓட்டங்களை எடுத்தார். மேலும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். குறிப்பாக ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணிக்கு தொடரை வெல்ல உதவினார்.
இதேவேளை, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், அயர்லாந்தின் ஐமி மாகுவேர், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஈஷா ஓசா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<