ஐசிசி U19 மகளிர் உலகக்கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான சுபர் சிக்ஸ் சுற்றுப்போட்டியில் இலங்கை U19 மகளிர் அணி ஒரு ஓட்டத்தால் அதிர்ச்சித்தோல்வியை சந்தித்தது.
இலங்கை மகளிர் U19 அணி அரையிறுதிக்கான வாய்ப்பை ஏற்கனவே தவறவிட்டிருந்தாலும், இந்தப்போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக இந்தப்போட்டியில் அற்புதமான பிடியெடுப்புகளுடன் சிறந்த களத்தடுப்பு திறமையை இலங்கை அணி வெளிப்படுத்தியிருந்தது.
ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம் காண்பித்த இந்தியா
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. குறிப்பாக இலங்கை அணியின் துலங்க திசாநாயக்க, ரஷ்மி நேத்ரான்ஜலியின் பிடியெடுப்புகள் மற்றும் விதுசிகா பெரேரா, தெவ்மி விஹங்கா ஆகியோரின் பந்துவீச்சின் மூலம் இந்த ஓட்ட எண்ணிக்கைக்குள் தென்னாபிரிக்க அணியை கட்டுப்படுத்த முடிந்தது.
தென்னாபிரிக்க அணியின் கெயலா ரெய்னிக் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, விதுசிகா பெரேரா 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி மந்தமான வேகத்தில் இன்னிங்ஸை ஆரம்பித்தது. குறிப்பாக நெத்மி சேனாரத்ன மற்றும் விஷ்மி குணரத்ன ஆகியோர் அதிக பந்துகளை எடுத்துக்கொண்டனர். இதில் விஷ்மி குணரத்ன ஆட்டமிழக்க, நெத்மி சேனாரத்ன (36 ஓட்டங்கள்) சிறப்பாக ஓட்டங்களை குவித்தார்.
இருப்பினும் முதல் 10 ஓவர்களில் 41 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதால், கடைசி 10 ஓவரில் 94 ஓட்டங்களை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும், தெவ்மி விஹங்கா 23 பந்துகளில் 37 ஓட்டங்களையும், மனுதி நாணயகார 9 பந்துகளில் 17 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை நெருங்கியபோதும், இறுதிநேர விக்கெட்டுகளால் இலங்கை அணியால் வெற்றியிலக்கை அடையமுடியவில்லை.
இலங்கை அணியில் ஆட வியாஸ்காந்த் என்ன செய்ய வேண்டும்?
கடைசி ஓவரில் 12 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், இலங்கை அணியால் 10 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்ததுடன், ஒரு ஓட்டத்தால் தோல்வியை சந்தித்தது.
இலங்கை U19 மகளிர் அணி மொத்தமாக 5 போட்டிகளில் விளையாடியிருந்ததுடன், அமெரிக்கா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் மாத்திரம் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<