தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிருக்கான 19 வயதின் கீழ் உலகக் கிண்ண தொடருக்கான இரண்டாவது பயிற்சிப்போட்டியில் ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவின் மிட்ரேண்ட் ஸ்டெய்ன் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஏமாற்றமளிக்கிறதா? – கிரிஸ் சில்வர்வூட்!
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி முதலிரண்டு ஓவர்களில் 25 ஓவர்களை கடந்திருந்தபோதும், அய்ல்ஸா லிஸ்டரை வீழ்த்தி பமோதா ஷைனி இலங்கை அணிக்கு ஆரம்பம் ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.
பின்னர் ஸ்கொட்லாந்து அணியின் ஓட்டவேகம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தநிலையில் 10வது ஓவரில் தெவ்மி விஹங்கா அபாரமாக பந்துவீசி ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்த ஸ்கொட்லாந்து அணி முழுமையாக சரியத்தொடங்கியது. இவர் கெத்ரின் பிரசர், மொல்லி படோன் மற்றும் எமிலி டக்கர் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச்செய்தார்.
இதன்படி முதல் 10 ஓவர்களில் 56 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த ஸ்கொட்லாந்து அணி, 16.3 ஓவர்களில் 87 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் விஹங்கா 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், விதுசிகா பெரேரா 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இந்திய ஆடுகளங்களை பயன்படுத்த தவறும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள்?
பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை மகளிர் அணியின் முதல் 2 விக்கெட்டுகளும் குறைந்த ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டதுடன், மோசமான ஆரம்பம் அணிக்கு கிடைத்தது. எனினும் அணித்தலைவி விஷ்மி குணரத்ன நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றதுடன், விஹங்கா மற்றும் மனுதி நாணயக்கார ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கியிருந்தனர்.
இதன்மூலம் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி 2 ஓவர்கள் மீதமிருக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. இலங்கை அணி உலகக் கிண்ண தொடரில் தங்களுடைய முதல் போட்டியில் அமெரிக்க அணியை எதிர்வரும் 14ஆம் திகதி எதிர்கொள்ளவுள்ளது.
சுருக்கம்
- ஸ்கொட்லாந்து அணி 87/10 (16.3) – டார்சி கார்டர் 16, தெவ்மி விஹங்கா 4/17, விதுசிகா பெரேரா 3/18
- இலங்கை அணி 91/3 (18.1) – விஷ்மி குணரத்ன 39*, மனுதி நாணயக்கார 17*, கெத்ரின் பிரசர்1/13
முடிவு – இலங்கை 19 வயதின் கீழ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<