சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படுகின்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12ஆவது அத்தியாயம் எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச்சில் உள்ள ஹேங்லி ஓவல் மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், இளையோர் உலகக் கிண்ண வரலாற்றில் முதற்தடவையாக அங்குரார்ப்பண நிகழ்வு நியூசிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் டெப்பி ஹொக்லி தலைமையில் கடந்த 07ஆம் திகதி நடைபெற்றது.
இளையோர் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு முதல் தோல்வி
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்…
நியூசிலாந்தின் கலை, கலாசாரங்களை பிரிதிபலிக்கும் வகையில் மயோரி நடனத்துடனான வண்ணமயமான ஆரம்ப நிகழ்வுகளுடன் கிறைஸ்சேர்ச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிறைஸ்சேர்ச் மாநில கவுன்சிலர் ஆரோன் கொயோன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், நியூசிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் டெப்பி ஹோங்லி, ஐ.சி.சி சார்பாக வரவேற்புரை நிகழ்த்தினார். அத்துடன், 16 நாடுகளைச் சேர்ந்த விசேட பிரதிநிதிகளும் இதன்போது பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நியூசிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் டெப்பி ஹொக்லி, ”சர்வதேச அரங்கில் தொழில்சார் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதில் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. நட்பு, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் விளையாடுதல் ஆகிய பெறுமதிமிக்க பண்புகளை இத்தொடர் கற்பிக்கின்றது. அதற்கும் மேலாக விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தைப் போற்றும் தன்மையையும் இப்போட்டி ஏற்படுத்துகின்றது” எனத் தெரிவித்தார்.
இளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பங்குபற்றும் அனைத்து நாடுகளின் பங்குபற்றலுடன் ஆரம்ப விழா ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும். இதுதொடர்பில் போட்டி ஏற்பாட்டுக்குழுவின் பணிப்பாளர் பிரென்டண் ப்ரோக் கருத்து வெளியிடுகையில்,
”இதற்கு முன்னர் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 16 நாடுகளும் பங்குபற்றிய ஆரம்ப விழா ஒன்று நடைபெற்றதில்லை” என்றார்.
இந்நிலையில் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இலங்கை உள்ளிட்ட அணிகளின் தலைவர்கள் தங்களது ஆயத்தம், எதிர்பார்ப்பு குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர்.
அணியைத் தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்ற ஹத்துருசிங்க
பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே…
நியூசிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் டெப்பி ஹோங்லி: ‘இந்த நிகழ்வானது, சர்வதேச நிபுணர்களின் பங்குபற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்துடன், வீரர்களுக்கு பெறுமதிமிக்க படிப்பினைகள், ஒழுக்கம், தலைமைத்துவம் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளவதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமையவுள்ளது.
போட்டியின் இயக்குனர் பிரெண்டன் போர்க்கே: ‘ஐ.சி.சியின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் இதற்கு முன்னர் 16 அணிகளின் பங்குபற்றலுடன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவில்லை. எனவே இந்த முறை அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை இங்குள்ள இளம் வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.
இந்நிலையில், இலங்கை அணியின் தலைவர் கமிந்து மெண்டிஸ் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில், ”நாங்கள் இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. எனவே, இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்வது எமது கிரிக்கெட் வளர்ச்சிக்கு சிறந்த ஊக்கமாக அமையவுள்ளது. எமது அணி தற்போது நல்ல நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக அண்மைக்காலமாக எமது வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றதால் இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லவதற்கு ஆவலுடன் இருக்கின்றோம். அதற்காக நாங்கள் சில புதிய திட்டங்களையும் வகுத்துள்ளோம். கடந்த இரு மாதங்களாக நாங்கள் சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டோம். எனவே அவற்றை உலகக் கிண்ணத்தில் பிரயோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
இதேவேளை, நடப்புச் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் இமானுவல் ஸ்டுவர்ட் கருத்து வெளியிடுகையில், ”இது என்னுடைய இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியாகும். இத்தொடரில் பங்கேற்பது சிறந்த அனுபவத்தைக் கொண்டிருக்கின்றது. இறுதியாக நடைபெற்ற உலகக் கிண்ணத்தை நாங்கள் வென்றது எங்களுக்கு ஒரு சிறந்த தருணமாக அமைந்தது. எனவே இம்முறை தொடரில் சிறப்பாக விளையாடி மேற்கிந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல பெறுமதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த போட்டித் தொடரானது எங்களுடைய கிரிக்கெட் எதிர்காலத்துக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்” என தெரிவித்தார்.
இதேவேளை, இளையோர் உலகக் கிண்ணத்தை 3 தடவைகள் வெற்றிகொண்ட அணியாக விளங்குகின்ற இந்திய அணியின் தலைவர் பிரித்வி ஷா கருத்து வெளியிடுகையில், ”நாங்கள் நியூசிலாந்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வருகை தந்தோம். ஒரு சில பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடியிருந்தோம். எனவே போட்டிகளுக்கு முகங்கொடுக்க நாம் தயாராகவுள்ளோம். இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்வதுதான் எமது இலக்காகும். ஆனாலும், அவுஸ்திரேலிய அணியுடனான முதல் போட்டியில் வெற்றிபெறுவதான் முதல் எதிர்பார்ப்பாக உள்ளது” என்றார்.
ஜிம்பாப்வே ஒரு நாள் அணியில் மீண்டும் நட்சத்திர வீரர்கள்
இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களான..
இந்நிலையில், இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்படுகின்ற இத்தொடரின் முன்னாள் சம்பியன்களாக பாகிஸ்தான் அணியின் தலைவர் ஹசன் கான், ”இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்வதுதான் எமது இலக்காகும். இதற்காக நாங்கள் சிறந்த முறையில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அவற்றை போட்டிகளில் சரியாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு பலத்த போட்டியை கொடுத்து வெற்றிபெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
அத்துடன், கடந்த வருடம் மலேஷியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் தொடரில் முதற்தடவையாக சம்பியன் பட்டம் வென்று அண்மைக்காலமாக கிரிக்கெட் அரங்கில் பிரகாசித்து வருகின்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் நவீன் உல் ஹக் கருத்து வெளியிடுகையில், ”இம்முறை உலகக் கிண்ணத்தில் சிறப்பாக விளையாடுவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். நியூசிலாந்துக்கு 2 வாரங்கள் முன்னதாக வருகை தந்து காலநிலை மற்றும் இங்குள்ள ஆடுகளங்களின் தன்மைகளை நன்கு அறிந்து கொண்டோம்” என்றார்.
இதேவேளை, இந்திய வம்சாவளி வீரராக அவுஸ்திரேலிய அணியை முதற்தடவையாக வழிநடத்தவுள்ள ஜேசன் சங்கா இத்தொடர் குறித்து கருத்து வெளியிடுகையில், ”நாங்கள் வலைப் பயிற்சிகளில் சிறப்பாக முன்னெடுத்தோம். நியூசிலாந்து ஆடுகளங்கள் குறித்து நாம் நன்கு அறிவோம். எனவே, உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு எமக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
ஹத்துருசிங்கவின் வேண்டுகோளை நிறைவேற்றிய மெதிவ்ஸ்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்..
நியூசிலாந்தின் கிறைஸ்சேர்ச், குயீன்ஸ் டவுன், தவுரங்கா மற்றும் வங்கராய் ஆகிய நகரங்களில் உள்ள 7 முக்கிய மைதானங்களில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி தவுரங்காவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் வரவேற்பு நாடான நியூசிலாந்து அணி, நடப்புச் சம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கவுள்ளது. மறுபுறத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஆப்கானிஸ்தானையும், பங்களாதேஷ் அணி நமீபியாவையும், ஜிம்பாப்வே அணி பபுவா நியூகினியாவையும் எதிர்த்து போட்டியிடவுள்ளன. டி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, 14ஆம் திகதி அயர்லாந்து அணியை சந்திக்கவுள்ளது.
அதற்கு முன்னதாக தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடுகின்றன.
ஐ.சி.சியினால் 2 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகள் 1988ஆம் ஆண்டு முதல்தடவையாக அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது. அதன் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வரவேற்பு நாடான அவுஸ்திரேலியா சம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இறுதியாக 2016ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> பல வீடியோக்களைப் பார்வையிட <<