அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் 2028ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில், கிரிக்கெட் போட்டிகளை இணைத்துக்கொள்வதற்கான நகர்வை சர்வதேச கிரிக்கெட் சபை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த தயார்படுத்தலுக்கான ஏலத்தினை நடத்துவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான தனிக்குழுவொன்றும் ஐசிசியால் நியமிக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர்
அமெரிக்காவை பொருத்தவரை, 30 மில்லியன் கிரிக்கெட் ரசிர்கள் உள்ள நிலையில், லொஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்டை கொண்டுவருவதற்கு சரியான சந்தர்ப்பம் இதுவென ஐசிசி தரப்பிலிருந்து கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதற்கு முன்னர் பரிஸில் 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய அணிகள் மோதியிருந்தன. இவ்வாறான நிலையில், 128 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கிரிக்கெட் ஒலிம்பிக்கிற்கு வரும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த இந்த விடயம் தொடர்பில் ஐசிசியின் தலைவர் கிரெக் பார்க்லே கருத்து வெளியிடுகையில், “முதலில், இவ்வாறான கடினமான காலப்பகுதியில் டோக்கியோ ஒலிம்பிக்கை சிறப்பாக நடத்தியமைக்கு, ஐசிசி சார்பாக, சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். டோக்கியோ ஒலிம்பிக்கை பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருந்ததுடன், எதிர்வரும் காலங்களில் ஒலிம்பிக்கில், கிரிக்கெட்டும் நடைபெறும் என்ற எண்ணம் மிகவும் மகிழ்ச்சிக்குறிய ஏற்படுத்துகிறது.
இந்த முயற்சியின் பின்னால் எமது விளையாட்டு ஒன்றுபட்டுள்ளது, மேலும் ஒலிம்பிக்கை, கிரிக்கெட்டின் நீண்டகால எதிர்காலத்தின் ஒரு பகுதியாக நாங்கள் பார்க்கிறோம். உலகளவில் கிரிக்கெட்டுக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைப் பார்க்க விரும்புகிறார்கள்” என்றார்.
அத்துடன், ஐசிசி தலைவர் வெளியிட்டுள்ள கருத்தின்படி, கிரிக்கெட்டின் 92 சதவீதமான ரசிகர்கள் தெற்காசியாவில் இருந்தாலும், 30 மில்லியன் ரசிகர்கள் அமெரிக்காவில் உள்ளனர். எனவே, அவர்களுக்கு, தங்களுக்கு விருப்பமான வீரர்கள், ஒலிம்பிக்கில் போட்டியிடுவதை பார்வையிட முடியும்.
அதேநேரம், ஐசிசியால் நியமிக்கப்பட்டுள்ள, ஒலிம்பிக் பணிக்குழுவின் தலைவராக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் தலைவர் இயன் வட்மோர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன், ஐசிசியின் சுயாதீன பணிப்பாளர் இந்ரா நூயி, ஜிம்பாப்வே கிரிக்கெட் சபையின் தலைவர் டவெங்குவா முகுஹல்லானி, தெற்காசிய கிரிக்கெட் சபையின் உப தலைவர் மஹிந்தா வல்லிபுரம் மற்றும் அமெரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் பராக் மராதே ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இதில், லொஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை நடத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் பராக் மராதே,
“ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பதற்கான முயற்சியை ஆதரிப்பதில் அமெரிக்க கிரிக்கெட் சபை மகிழ்ச்சியடைகிறது. இந்த நேரத்தில் அமெரிக்காவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான திட்டங்களுடன் சரியாக ஒத்துப்போகிறது.
பல ஆர்வமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ளனர். சர்வதேச ரீதியில் கிரிக்கெட்டை பின்தொடர்வோர் மிகவும் அதிகமாக உள்ளனர். கிரிக்கெட்டை உள்ளீர்ப்பது, லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெரும் மதிப்பை அளிக்கும் என நம்புகிறோம். அத்துடன், இந்த நாட்டில் கிரிக்கெட்டை ஒரு முக்கிய விளையாட்டாக மாற்றுவதற்கும் இந்த விடயம் ஊன்றுகோலாக அமையும்” என்றார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<