சர்வதேச கிரிக்கெட் வாரியம் சோதனை முறையில் ஆரம்பித்திருந்த நிறுத்து கடிகார (Stop Clock) விதிமுறையை T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு சோதனை நடவடிக்கையாக போட்டிகளின் போது அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் டுபாயில் நடைபெற்ற ஐசிசி சந்திப்பின்போது இந்த விதிமுறை நிரந்தரமாக அமுல்படுத்தப்படும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
>> சென்னை சுபர் கிங்ஸ் உடன் இணையும் யாழ்ப்பாண இளம் வேகப்பந்துவீச்சாளர்
அதன்படி ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், இந்த ஆண்டு மே.தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள T20i உலகக்கிண்ணத்திலும் இந்த விதிமுறை நடைமுறையாகவுள்ளது.
நிறுத்து கடிகாரத்தின் விதிமுறையை பொருத்தவரை ஒரு ஓவர் நிறைவின் போது நிறுத்து கடிகாரம் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த ஓவர் ஆரம்பிக்கும் போது கடிகாரம் நிறுத்தப்படும். பந்துவீசும் அணியானது ஓவர்களுக்கு இடையில் 60 செக்கன்களை மாத்திரமே எடுத்துக்கொள்ள முடியும்.
குறித்த இந்த நேரத்திற்குள் பந்துவீச தவறும் பட்சத்தில் ஆடுகளத்தில் உள்ள நடுவர் இரண்டு தடவைகள் பந்துவீசும் அணியை எச்சரிக்க முடியும். மூன்றாவது தடவையாக இந்த தவறு இடம்பெறும் பட்சத்தில் துடுப்பாட்ட அணிக்கு 5 ஓட்டங்கள் மேலதிகமாக வழங்கப்படும்.
நிறுத்த கடிகாரத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு கள நடுவர்கள் மற்றும் மூன்றாவது நடுவருக்கு வழங்கப்படும் என்பதுடன், இறுதி தீர்மானத்தை நடுவர்களால் எடுக்க முடியும். அதேநேரம் போட்டியின் போது மேன்முறையீடு செய்யும் நேரம், துடுப்பாட்ட வீரரால் நேரம் தாமதமாக்கப்படுவது மற்றும் வேறு காரணங்களால் தாமதம் ஏற்படுமாயினும் அதற்கான முடிவினை எடுக்கும் போறுப்பும் நடுவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<