T20 உலகக்கிண்ணத்துக்கான மே.தீவுகள் குழாம் அறிவிப்பு

ICC T20 World Cup 2022

306

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான மேற்கிந்திய தீவுகள் குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள மேற்கிந்திய தீவுகள் குழாத்தின் தலைவராக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ரோவ்மன் பவெல் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

>> T20 உலகக்கிண்ணத்துக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் எவின் லிவிஸ் கடந்த வருடம் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தின் பின்னர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், முன்னணி சகலதுறை வீரர் அன்ரே ரசலுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

எவின் லிவிஸ் உடற்தகுதி காரணமாக தொடர்ந்து அணியில் வாய்ப்பை தக்கவைக்க தவறிவந்த நிலையில், தற்போது T20 உலகக்கிண்ண குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். அன்ரே ரசல் சர்வதேச அளவில் நடைபெறும் லீக் தொடர்களில் இடம்பெற்றுவந்தாலும், இந்த T20 உலகக்கிண்ணத்துக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருடன் தனிப்பட்ட காரணங்களுக்காக பெபியன் எலன் அணியில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளவில்லை.

அணியில் முக்கிய உள்ளீடாக 30 வயதான சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரர் யானிக் கரைய்யா இணைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்தமாதம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியிருந்ததுடன், T20 போட்டியில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார்.

யானிக் கரைய்யா மேற்கிந்திய தீவுகள் அணியில் ஹெய்டன் வோல்ஸ் ஜூனியருக்கு மாற்றீடாக இணைக்கப்பட்டுள்ளதுடன், கரீபியன் பிரீமியர் லீக்கில் பிரகாசித்துவரும் ஜோன்ஸன் சார்ல்ஸ் மற்றும் இடதுகை வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் ரெய்மன் ரீபர் ஆகியோரும் குழாத்தில் இடம்பிடித்துள்ளனர்.

குறிப்பிட்ட இந்த மாற்றங்களுடன் அணியில் தொடர்ந்து விளையாடிவரும் ஷிம்ரொன் ஹெட்மையர்,  ஷெல்டன் கொட்ரல், ஓடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், பிரெண்டன் கிங், ஒபேட் மெகோய் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோரும் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை T20 உலகக்கிண்ணத்தொடரில் முதல் சுற்றில் விளையாடவுள்ளது. முதல் சுற்றில் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

நிக்கோலஸ் பூரன் (தலைவர்), ஷிம்ரொன் ஹெட்மையர், எவின் லிவிஸ், ரோவ்மன் பவெல் (உப தலைவர்), ஜேசன் ஹோல்டர், கெயல் மேயர்ஸ், யானிக் கரைய்யா, ஆகில் ஹொஸைன், ஒபெட் மெகோய், ஜொன்ஸன் சார்ல்ஸ், அல்ஷாரி ஜோசப், ரெய்மன் ரீபர், ஷெல்டன் கொட்ரல், பிரெண்டன் கிங், ஓடியன் ஸ்மித்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<