அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள குழாத்தை பொருத்தவரை, ஆசியக் கிண்ண குழாத்திலிருந்து அதிகமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
>> தென்னாபிரிக்க பயிற்சிவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ள மார்க் பௌச்சர்
ஆசியக் கிண்ணத்தில் உபாதை காரணமாக விளையாடாமலிருந்த முன்னணி வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவருடன், உபாதைக்கு முகங்கொடுத்திருந்த மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான லஹிரு குமாரவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
தசுன் ஷானக தலைமையிலான இந்த குழாத்தில் ஆசியக் கிண்ணத்தில் ஓட்டங்களை பெறத்தவறியிருந்த உப தலைவர் சரித் அசலங்கவுக்கு தொடர்ந்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணியின் துடுப்பாட்ட வரிசையை பொருத்தவரை பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, தனுஷ்க குணதிலக்க மற்றும் சரித் அசலங்கவுடன் ஐந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சகலதுறை வீரர்களாக அணியின் தலைவர் தசுன் ஷானகவுடன் வனிந்து ஹஸரங்க, தனன்ஜய டி சில்வா, சாமிக்க கருணாரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் சுழல் பந்துவீச்சாளர்களாக மஹீஷ் தீக்ஷன மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அணியின் வேகப் பந்துவீச்சு குழாத்தை பொருத்தவரை அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோருடன், இளம் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியின் கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ண குழாத்திலிருந்து தினேஷ் சந்திமால், குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் தங்களுடைய வாய்ப்பை தவறவிட்டுள்ளனர். இதில் அவிஷ்க பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோர் உபாதைகள் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
எனினும் தினேஷ் சந்திமால், பினுர பெர்னாண்டோ, அஷேன் பண்டார, பிரவீன் ஜயவிக்ரம மற்றும் நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோர் மேலதிக வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜயவிக்ரம ஆகியோர் அணியுடன் அவுஸ்திரேலியா பயணிப்பர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை குழாம்
- துடுப்பாட்ட வீரர்கள் – பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, சரித் அசலங்க
- சகலதுறை வீரர்கள் – தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன
- வேகப்பந்துவீச்சாளர்கள் – துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுசங்க, பிரமோத் மதுசான், லஹிரு குமார
- சுழல் பந்துவீச்சாளர்கள் – மஹீஷ் தீக்ஷன, ஜெப்ரி வெண்டர்சே
மேலதிக வீரர்கள் – பிரவீன் ஜயவிக்ரம, அஷேன் பண்டார, பினுர பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், நுவனிந்து பெர்னாண்டோ
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<