T20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு: ஐ.சி.சி அறிவிப்பு

1740

கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழுமையாக குறைவடையாததனை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தினை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்திருக்கின்றது.

>>நான்கு மாதங்களின் பின் பயிற்சிகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்<<

கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இடம்பெறுவது தொடர்பில் சந்தேகம் நிலவி வந்தது. எனினும், இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணம் தொடர்பிலான இறுதி முடிவு இந்த மாதம் இடம்பெறும் ஐ.சி.சி. இன் சந்திப்புக்கு அமையவே எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஐ.சி.சி. இன் குறித்த சந்திப்பானது இன்று (20) நடைபெற்றிருக்கும் நிலையிலையே, இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் பிற்போடப்பட்டிருக்கும் செய்தி உறுதியாகியிருக்கின்றது. 

அதேநேரம், இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் பிற்போடப்பட்டுள்ளதால் ஐ.சி.சி. அடுத்த மூன்று ஆண்டுகளிலும் ஆடவர்களுக்கான இரண்டு T20 உலகக் கிண்ணத் தொடர்களையும், ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றினையும் நடாத்த திட்டமிட்டுள்ளது.  

குறித்த தொடர்களுக்காக ஐ.சி.சி. அறிவித்திருக்கும் திகதிகள் கீழ் வருமாறு

  • 2021ஆம் ஆண்டுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் – 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் தொடக்கம் 2021ஆம் ஆண்டின் நவம்பர் வரை – இறுதிப் போட்டி (நவம்பர் 14, 2021)
  • 2022ஆம் ஆண்டுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் – 2022ஆம் ஆண்டின் ஒக்டோபர் தொடக்கம் 2022ஆம் ஆண்டின் நவம்பர் வரை – இறுதிப் போட்டி (நவம்பர் 13, 2022)
  • 2023ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் – 2023ஆம் ஆண்டின் ஒக்டோபர் தொடக்கம் 2023ஆம் ஆண்டின் நவம்பர் வரை – இறுதிப் போட்டி (நவம்பர் 26, 2023)

இதேநேரம் ஐ.சி.சி. இன் வர்த்தகத்துடன் தொடர்புடைய விடயங்களை முகாமை செய்யும் குழுக்களில் ஒன்று (IBC) நிலைமைகளை சரிவர அவதானித்து 2021, 2022 ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களை வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் நடாத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருக்கின்றது. 

>>40 வயதானாலும் என்னால் சாதிக்க முடியும் – ஹர்பஜன் சிங்<<

அதேவேளை ஐ.சி.சி. இன் நிறைவேற்று அதிகாரியாக இருக்கும் மன்னு சாவ்னி இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் பிற்போடப்பட்டதற்கான காரணத்தினைக் குறிப்பிடும் போது அது வீரர்களின் உடல்நிலை பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு எனத் தெரிவித்திருந்தார்.

மறுமுனையில் T20 உலகக் கிண்ணம் பிற்போடப்பட்டுள்ளதால், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் T20 உலகக் கிண்ணம் நடைபெறவிருந்த குறித்த காலப்பகுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

விடயங்கள் இவ்வாறு இருக்க நிலைமைகளை அவதானித்து ஏற்கனவே திட்டமிட்டபடி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரினை 2021ஆம் ஆண்டின் பெப்ரவரியில் நியூசிலாந்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும் ஐ.சி.சி. குறிப்பிட்டிருக்கின்றது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<