சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) நடத்தும் முக்கியமான உலகத் தொடர்களில் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெறவேண்டும் என்பது ஒவ்வொரு சர்வதேச அணிகளுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்றாகும்.
எத்தனை பலம் கொண்ட அணியாக இருந்தாலும், தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வந்த அணியாக இருந்தாலும், மிகப்பெரும் உலகத் தொடர்களின் அழுத்தம் என்பது அவர்களை ஒரு போட்டியில் பலவீனமடையச் செய்திடும்.
உலகக்கிண்ணத்துக்கு முன்னதாக இலங்கை விளையாடவுள்ள போட்டிகள் அறிவிப்பு!
எனவே, உலகத்தொடர்களில் கிடைக்கும் முதல் போட்டியின் நம்பிக்கை, குறிப்பிட்ட தொடர் முழுவதும் அந்த அணியின் ஆதிக்கத்துக்கும், புத்துணர்ச்சிக்கும் மிகப்பெரும் உந்துகோளாக அமையும்.
அந்தவகையில், 2012ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கு கிடைத்த ஆரம்பம் என்பது, ரசிகர்களால் இன்றுவரை மறக்க முடியாத ஒரு ஆரம்பமாகும்.
இலங்கை கிரிக்கெட் சபை 2012ம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றிருந்த நிலையில், ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில், இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது.
முதல் போட்டியில் கிடைக்கும் பலம், தொடர் முழுவதும் அணிக்கு கிடைக்கும் என்ற நிலைக்கு ஏற்ப, இலங்கை அணி, இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறியிருந்த போதும், மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியடைந்து, கிண்ணத்தை தவறவிட்டிருந்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனை மாய சுழல் பந்துவீச்சாளர்கள் வந்துசென்றிருந்தாலும், அஜந்த மெண்டிஸின் வருகையானது, இலங்கை அணிக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில், மிகவும் சக்திவாய்ந்த விடயமாக அமைந்திருந்தது.
மாயஜாலம் செய்து இலங்கையின் உலகக் கிண்ண கனவினை நனவாக்கிய ஹேரத்
அவரின் பந்துகளை கணிப்பதற்கு பல்வேறு அணிகளும் தடுமாறிவந்த சந்தர்ப்பத்தில், 2012ம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் அஜந்த மெண்டிஸின் மாய சுழலை தங்களுடைய பலமாக கொண்டு இலங்கை களமிறங்கியது.
தங்களுடைய ரசிகர்கள் முன்னிலையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு, முதல் போட்டியின் முதல் தோல்வி நாணய சுழற்சி. ஜிம்பாப்வே அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
நாணய சுழற்சியில் தோல்வியடைந்தாலும், போட்டியில் சிறந்த ஆரம்பம் கிடைக்கப்பெற்றது. துடுப்பாட்ட வீரர்கள் தங்களுடைய பங்களிப்பை சரியான முறையில் வழங்க, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஜீவன் மெண்டிஸ், குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் சிறந்த ஓட்டக்குவிப்புகள் அணியை திடமான ஓட்ட இலக்குக்கு அழைத்துச்செல்ல, அணியின் வெற்றிக்கு மீதமுள்ள பணிகளை செய்யவேண்டியது பந்துவீச்சாளர்களின் கடமையாகிவிட்டது.
இலங்கை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கு கடினமானது. குறித்த காலப்பகுதியில் ஜிம்பாப்வே அணி பலமான அணியாகவும் இல்லை. எனினும், அந்த அணியை குறைத்து மதிப்பிடமுடியாது. சிலநேரங்களில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி தோல்விகளை பரிசாக வழங்கிய அணி. அதுமாத்தரமின்றி, T20 போட்டிகளை பொருத்தவரை, எந்த அணி வெற்றிபெறும் என்பதை ஒருபோதும் உறுதியாக கூறமுடியாது. பலமான அணியோ அல்லது பலவீனமான அணியோ, T20 போட்டிகளில், அன்றைய தினத்தில் எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும்.
எனவே, இவ்வாறான அழுத்தங்கள் இருக்கும் நிலையில், களமிறங்கிய இலங்கை அணிக்கு, வெற்றியை பெற்றுக்கொடுப்பதற்கு, அஜந்த மெண்டிஸின் பந்துவீச்சு மிகப்பெரும் ஊன்றுகோளாக அமையும் என்ற நம்பிக்கை இலங்கை அணியிடம் இருந்த போதும், பந்துவீச்சில் சாதனை படைக்க போகிறார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.
விக்கெட்டிழப்பின்றிய ஆரம்பத்தை ஜிம்பாப்வே அணி 37 ஓட்டங்கள் வரை பெற்றிருந்த நிலையில், அணித்தலைவர் மஹேல ஜயவர்தனவுக்கு குறித்த இணைப்பாட்டத்தை தகர்ப்பதற்கான பந்துவீச்சாளர் தேவைப்பட்டார். இந்தநிலையில், அஜந்த மெண்டிஸ் அழைக்கப்பட, அணித்தலைவரின் எதிர்பார்ப்பை மெண்டிஸ் நிறைவேற்றினார்.
தன்னுடைய முதல் ஓவரில் உசி சிபண்டாவை, போல்ட் முறையில் வெளியேற்றிய மெண்டிஸ், அதே ஓவரின் அடுத்த பந்தில் ஜிம்பாப்வே அணியின் தலைவர் பிரெண்டன் டெய்லரின் விக்கெட்டினை வீழ்த்தி, இலங்கை அணிக்கு போட்டியில் சாதகத்தை கொடுத்தார்.
தொடர்ந்து அணியின் 8வது ஓவருக்காக அழைக்கப்பட்ட இவர், ஜிம்பாப்வே அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஹெமில்டன் மஷகட்ஷாவை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச்செய்தார். குறித்த ஓவரின் நிறைவின் பின்னர், அணியின் 14வது ஓவருக்கு அழைக்கப்பட்ட இவர், எல்டன் சிகும்புராவை வீழ்த்தி, தன்னுடைய நான்காவது விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர், தன்னுடைய இறுதி ஓவரை வீசுவதற்கான 16வது ஓவரில் வருகைத்தந்த மெண்டிஸ், பிரொஸ்பர் உட்சயா மற்றும் கெயல் ஜார்விஸ் ஆகியோரை ஆட்டமிழக்கச்செய்து, ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார்.
இதனால், தன்னுடைய 4 ஓவர்களில் 8 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்த அஜந்த மெண்டிஸ், 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டு ஓட்டமற்ற ஓவர்களை வீசியும் அசத்தியிருந்தார்.
அஜந்த மெண்டிஸின் அபார பந்துவீச்சின் உதவியுடன், 82 ஓட்டங்கள் வித்தியாசத்திலான ஒரு வெற்றியினை இலங்கை அணி பதிவுசெய்தது. குறித்த வெற்றியை தாண்டியும், அஜந்த மெண்டிஸின் பந்துவீச்சு இன்றுவரையும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சர்வதேச T20I போட்டிகளில் அதிசிறந்த பந்துவீச்சை இந்திய அணியின் தீபக் சஹார் (7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள்) வைத்திருந்தாலும், T20 உலகக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டால், இன்றுவரையும் சிறந்த பந்துவீச்சு பிரதியாக அஜந்த மெண்டிஸின் இந்த போட்டியின் பிரகாசிப்பு அமைந்திருக்கிறது.
அஜந்த மெண்டிஸ் இந்தப் போட்டியில் மாத்திரமில்லாமல், பல போட்டிகளில் இவ்வாறான பிரகாசிப்புகளை வழங்கியிருந்தாலும், ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் வெளிப்படுத்திய இந்த பந்துவீச்சு பிரகாசிப்பானது, அவரின் திறமைக்கு கிடைத்த மிகப்பெரும் பரிசாகவே காணப்படுகின்றது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…