சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) புதிய விதிகள் இந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஐ.சி.சியினால் நடைமுறைக்கு கொண்டு வரவுள்ள நான்கு புதிய விதிகள் பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் போட்டித் தொடர்களின்போது நடைமுறைக்கு வரும் என ஐ.சி.சி இன்று (26) அறிவித்தது.
புதிய வீரர்களோடு பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ள இலங்கை டெஸ்ட் அணி
கிரிக்கெட்டின் புதிய விதிப்படி மைதானத்தில் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் நடுவரால் வெளியேற்றப்படுவார்கள். அத்துடன், டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தப்படாது. 20 ஓவர் போட்டிகளில் நடுவரின் முன்பு மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ரன் அவுட், பிடியெடுப்பு மற்றும் துடுப்பாட்ட மட்டைகளின் எடை ஆகியவற்றிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வீரர்கள் பயன்படுத்தும் துடுப்பு மட்டைகளின் அளவுகள்
போட்டிகளின்போது வீரர்கள் பயன்படுத்துகின்ற பல்வேறுபட்ட அளவுகளைக் கொண்ட துடுப்பு மட்டைகளுக்குப் பதிலாக ஒரே தரத்திலான ஒரே அளவுகளைக் கொண்ட துடுப்பு மட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. துடுப்பு மட்டையின் முனைப்பு 40 மில்.மீற்றரை மேற்படக்கூடாது என்பதுடன், எந்தவோர் இடத்திலும் துடுப்பு மட்டையின் தடிப்பானது 67 மில்.மீற்றரை விட மேற்படக்கூடாது.
ஓடும் போது ஆட்டமிழப்பு (ரன்– அவுட்)
வீரரொருவர் ஓடும்போது ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்கும் போது, அவர் எல்லைக் கோட்டுக்கு வெளியே துடுப்பு மட்டையை வைத்த சந்தர்ப்பத்தில் அது ஒரு தடவை எல்லைக் கோட்டை தொட்டு மீண்டும் மேலே உயர்ந்தால் அதனை ஆட்டமிழப்பு அல்ல என அறிவிக்க முடியும்.
சிவப்பு அட்டை
போட்டியின் போது மைதானத்திற்குள் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் கிரிக்கெட் வீரர்களை சிவப்பு அட்டை காண்பித்து மைதானத்திலிருந்து வெளியேற்றுவதற்கும், அவ்வாறு நடந்துகொண்ட குற்றத்திற்காக மேலதிக (போனஸ்) புள்ளியொன்றை வழங்கவும் நடுவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டியின் கண்ணியத்தை காப்பாற்றும் வகையில் வீரர்கள் நடந்து கொள்ள வேண்டியது அவசியமானது. போட்டி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு வீரர்கள் அந்த விதிமுறையை மீறுவது வழக்கம். வீரர்கள் ஸ்லெட்ஜிங் மற்றும் வார்த்தை போர்களில் ஈடுபடும் நிலை ஏற்படும். சில சமயங்களில் அது எல்லை மீறுவதும் உண்டு.
தற்போதைய நிலையில் வீரர்கள் எல்லை மீறி நடந்தது நடுவர்களுக்கு தெரியவந்தால், போட்டி முடிந்த பின்னர் விசாரணை நடத்தப்படும். அதன்பின் அபராதம் அல்லது தடை விதிக்கப்படும். இந்த விதிமுறையால் உடனடி தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே, கால்பந்தில் விதிமுறையை மீறும் வீரர்கள் மீது மைதான நடுவர்களே சிவப்பு அட்டை காண்பித்து அவர்களை வெளியேற்றும் விதிமுறை போன்று கிரிக்கெட் போட்டியிலும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதன்படி இப்புதிய விதிமுறை 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
புதிய டி.ஆர்.எஸ் முறை (DRS)
டி.ஆர்.எஸ் முறையைப் பயன்படுத்தி LBW ஆட்டமிழப்பிற்கு கேட்கப்படும் வேண்டுகோள், இனிமேல் கவனத்தில் கொள்ளப்படமாட்டாது. அதாவது, LBW மீதான வேண்டுகோள் தோல்வியடைந்தாலும், ரிவ்யூக்களின் எண்ணிக்கை குறையாது.
அதேபோல, டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், அதாவது 80 ஓவர்களுக்கு மேல் கேட்கப்படும் ரிவ்யூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட மாட்டாது. இதன்படி ஒரு இன்னிங்ஸிற்கு 2 ரிவ்யூக்கள் மாத்திரமே அணியொன்றுக்கு வழங்கப்படும்.
டக் அவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள நிரோஷன் திக்வெல்ல
வீரர்களின் நடத்தை விதிகள், நடுவரின் முடிவு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்) மற்றும் வீரர்கள் பயன்படுத்தும் துடுப்பாட்ட மட்டைகளின் அளவுகள் மீதான புதிய விதிகள் என்பன ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்துதான் நடைமுறைக்கு வருவதாக இருந்தது. எனினும், செப்டம்பர் 27ஆம் திகதி பங்களாதேஷ் – தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதால், அந்த தினத்திலிருந்து புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.சி.சி தீர்மானித்துள்ளது.
ஆனாலும் தற்போது நடைபெற்றுவருகின்ற இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் T-20 தொடரில் இப்புதிய விதிகள் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்புதிய கிரிக்கெட் விதிமுறைகள் அனைத்தும் எம்.சி.சியின் சட்டக்கோவையிலும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.