டெஸ்ட் சகலதுறை வீரர்களில் முதலிடம் பிடித்தார் ஜடேஜா

Sri Lanka Tour of India 2022

394

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா, ஐசிசி இன் டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மெஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த நிலையில், வீரர்களுக்கான ஐசிசி இன் புதிய டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் நேற்று (09) வெளியிடப்பட்டது. இதில் டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஜடேஜா டெஸ்ட் சகலதுறை வீரர்கள் தரவரிசையில் உச்சத்தை எட்டுவது இது இரண்டாவது முறையாகும். இறுதியாக அவர் 2017ஆம் ஆண்டு ஐசிசி இன் டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.

ஐசிசி இன் டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் 3ஆம் இடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா தற்போது 406 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மேற்கிந்திய வீரர் ஜேசன் ஹோல்டர் 2ஆவது இடத்திலும், ரவிசந்திரன் அஸ்வின் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதனிடையே, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 54 இடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா, 17 இடங்கள் முன்னேறி 37ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இலங்கை வீரர்களைப் பொறுத்தமட்டில் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தொடர்ந்து 8ஆவது இடத்தை தக்கவைத்துக் கொள்ள, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அரைச்சதங்கள் அடித்த நிரேஷன் டிக்வெல்ல, 4 இடங்கள் முன்னேறி 33ஆவது இடத்தையும், பெதும் நிஸ்ஸங்க 8 இட           ங்கள் முன்னேறி 50ஆவது இடத்தையம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் முதலிடத்திலும் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் 2ஆவது இடத்திலும், மற்றுமொரு அவுஸ்திரேலிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதனிடையே, விராட் கோஹ்லி 2 இடங்கள் முன்னேறி 5ஆவது இடத்திலும் ரிஷப் பாண்ட் ஒரு இடம் முன்னேறி 10ஆவது இடத்தில் உள்ளனர். இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா ஒரு இடம் பின்தங்கி 6ஆவது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அவுஸ்திரேலிய வீரர் பெட் கம்மனிஸ் முதலிடத்திலும் ரவிசந்திரன் அஸ்வின் இராண்டவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் கங்கிஸோ ரபாடா 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

இதேவேளை, ராவல்பிண்டியில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்களைக் குவித்து அசத்திய பாகிஸ்தானின் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக், டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 63ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல, குறித்த போட்டியில் சதமடித்த மற்றுமொரு பாகிஸ்தான் வீரரான அசார் அலி, 10 இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்தில் உள்ளார்.

இதேநேரம், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, தென்னாபிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஷ். மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<