இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சனிக்கிழமை (27) நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப்போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வீரர்களின் நன்னடத்தை மற்றும் ஒழுக்கம் சம்பந்தமான விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இலங்கை அணியின் நட்சத்திர இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஐ.சி.சியினால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[rev_slider LOLC]
சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றின் போது எதிரணி துடுப்பாட்ட வீரரொருவர் ஆட்டமிழந்த பிறகு ஆவேசமாக நடந்துகொண்டு தவறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டமை தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாகும்.
இந்நிலையில், இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதிய முக்கோணத் தொடரின் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் ஆட்டமிழந்த போது தனுஷ்க குணதிலக்க, இவ்வாறு ஆவேசப்படும் விதத்தில் நடந்துகொண்ட குற்றத்தை போட்டி நடுவர் டேவிட் பூனிடம் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம், ஐ.சி.சியின் விதிமுறைகளில் சரம் 2.1.7 இல் உள்ள, விளையாட்டு வீரர் மற்றும் விளையாட்டு வீரரின் உதவி செயற்பாட்டாளர் தொடர்பாகவிருக்கும் சட்டத்தில் காணப்படும் ‘வீரரொருவரை தூண்டும் விதத்தில் ஆவேசத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தைகளை சர்வதேச போட்டியொன்றில் பிரயோகித்தல்’ என்னும் குற்றத்திற்கு அமைவாக நடந்து கொண்டமைக்காக தனுஷ்க குணதிலக்க இவ்வாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ணத்தில் இலங்கை இளையோர் அணி பிளேட் சம்பியன்
எனவே தனுஷ்க குணதிலக்க இவ்வாறு நடந்துகொண்டமை முதற்தடவை என்பதால், அவருக்கு அபராதம் விதிக்காமல் எச்சரிக்கை விடுப்பதற்கு ஐ.சி.சி நடவடிக்கை எடுத்திருந்தது.
முன்னதாக கடந்த வருட இறுதியில் நடைபெற்ற இந்திய அணியுடனான ஒரு நாள் தொடரின் போது காலைப் பயிற்சிக்கு சமூகமளிக்காத தனுஷ்க குணதிலக்கவுக்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவன ஒழுக்க விதிமுறைகளில் 30ஆவது சரத்தை மீறிய குற்றத்திற்காக உடன் அமுலுக்கு வரும் வகையில் 6 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடையும், ஆண்டு ஒப்பந்த தொகையில் இருந்து 20 சதவீத அபராதமும் விதிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனையடுத்து குறித்த தடைக்கு எதிராக தனுஷ்க பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற SSC கழகம் மேன்முறையீடு செய்தது. இதன்படி, குறித்த மேன்முறையீடு பரிசீலிக்கப்பட்டு, தனுஷ்கவின் போட்டித்தடையை 3 போட்டிகளாக குறைப்பதற்கும், 20 சதவீத அபராதத்தை அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்டசாவும், இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்த போது ஆவேசமாக நடந்துகொண்டுள்ளார்.
இதன்படி, போட்டியின் போது 2 சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஆவேசமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக அவருடைய போட்டி சம்பளத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்க ஐ.சி.சி நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக 2016 இல் இங்கிலாந்து அணியுடனான ஒரு நாள் போட்டியின் போது மஷ்ரபி மொர்டசாஇதேபோன்று ஆவேசமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக ஐ.சி.சியினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டது.