உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தீடீரென ஒத்திவைப்பு

ICC World Test Championship

308

ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை 2019இல் அறிமுகப்படுத்தியது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் 8 முன்னணி அணிகள் 2019ம் ஆண்டு முதல் 2021 வரை விளையாடும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்துக்காக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இறுதிப் போட்டி 2021 ஜூன் 10-ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்திருந்தது.

>>ஒருநாள், T20i தொடர்களுக்காக இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணி

அண்மையில் நிறைவுக்கு வந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2–1 என தொடரை கைப்பற்ற, புள்ளிப்பட்டியலில் மாற்றம் ஏற்பட்டது.

இதன்படி இதுவரை பங்கேற்ற 5 தொடரிலும் வெற்றி பெற்ற இந்தியா (71.7%) முதலிடத்துக்கு முன்னேறியது. நியூசிலாந்து (70.0%), அவுஸ்திரேலியா (69.2%), இங்கிலாந்து (68.7%) அணிகள் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.

இந்திய அணி அடுத்து சொந்தமண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் குறைந்த பட்சம் 2 போட்டிகள் வித்தியாசத்தில் வென்றால் இந்தியா (2–0, 3–1, 3–0, 4–0) இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு உறுதியாகும்.

இருப்பினும் இந்திய அணி ஐ.சி.சி இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் என நம்பப்படுகிறது.

இதனிடையே, இந்தியாவில் ஐ.பி.எல் போட்டி ஏப்ரல் கடைசி வாரத்தில் ஆரம்பமாகி ஜூன் முதல் வாரத்தில் நிறைவடைய வாய்ப்புள்ளது.

>>இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை விமர்சிக்கும் மிக்கி ஆர்தர்

இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுயதனிமைப்படுத்தல் காலம் கடைபிடிக்க வேண்டும்.

எனவே, இந்திய வீரர்கள் ஐ.பி.எல் தொடரை முடித்துக்கொண்டு சுயதனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்ய வேண்டும் என்பதால் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்குப்பின் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை நடத்துவதற்கு ஐ.சி.சி அவதானம் செலுத்தியுள்ளது.

இதன்படி, ஜூன் 18ஆம் திகதி முதல் ஜூன் 22 ஆம் திகதிக்கு இறுதிப் போட்டியை ஒத்திவைத்துள்ளது. அத்துடன் ஜூன் 23ஆம் திகதியை மேலதிக தினமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<