ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் காணப்பட்ட இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் புதிய ஒருநாள் அணிகளின் தரப்படுத்தலில் இலங்கை ஒன்பதாமிடத்திலிருந்து எட்டாமிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ள அதேவேளை, இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையானது கிரிக்கெட் அந்தஸ்து வழங்கியுள்ள நாடுகளின் அடைவு மட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மூவகையான கிரிக்கெட் விளையாட்டுக்களுக்கும் தரவரிசைகளை வெளியிட்டு வருகிறது. ஐ.சி.சி இன் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தற்சமயம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக நுவான் பிரதீப் ஆடுவதில் சந்தேகம்
இவ்வுலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒருநாள் அணிகளின் தரவரிசையை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 75 சதவீதமான போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், உலகக்கிண்ண தொடரில் அணிகளினுடைய வெற்றி, தோல்விகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்ட புதிய ஒருநாள் அணிகளின் தரவரிசை இன்று (27) ஐ.சி.சி இனால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் 121 தரவரிசை புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் காணப்பட்ட உலகக்கிண்ண தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் இந்திய அணி தற்போது 123 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
125 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்தில் காணப்பட்ட இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கிண்ண தொடரில் இரண்டு தொடர் தோல்விகளை பதிவு செய்துள்ளதன் காரணமாக 122 புள்ளிகளுடன் இரண்டாமிடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
தொடர் ஆரம்பத்தில் தென்னாபிரிக்க அணி 115 தரவரிசை புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் காணப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தென்னாபிரிக்க அணி உலகக்கிண்ண தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது. அத்துடன் உலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்த இரண்டாவது அணியாகவும் தென்னாபிரிக்க அணி மாறியுள்ளது.
அரையிறுதியை தக்கவைக்கும் இலக்குடன் களமிறங்கவுள்ள இலங்கை!
தென்னாபிரிக்க அணியின் பின்னடைவால் 113 தரவரிசை புள்ளிகளுடன் நான்காமிடத்தில் காணப்பட்ட நியூசிலாந்து அணி உலகக்கிண்ண தொடரில் ஐந்து வெற்றிகளை பதிவு செய்துள்ளதன் காரணமாக 1 புள்ளியை மேலதிகமாக பெற்று மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஐந்தாமிடத்தில் இருந்த அவுஸ்திரேலிய அணி நடப்பு உலகக்கிண்ண தொடரில் ஆறு வெற்றிகளை பெற்று முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்து 3 தரவரிசை புள்ளிகளை மேலதிகமாக பெற்று நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
தென்னாபிரிக்க அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியதை தொடர்ந்து மூன்றாமிடத்திலிருந்து 6 தரவரிசை புள்ளிகளை இழந்து ஐந்தாமிடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 94 தரவரிசை புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் காணப்பட்ட பாகிஸ்தான் அணி நடப்பு உலக்கிண்ண தொடரில் மூன்று வெற்றிகளையும், மூன்று தோல்விகளையும் சந்தித்துள்ளதன் காரணமாக 2 தரவரிசை புள்ளிகளை மேலதிகமாக பெற்று ஆறாமிடத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றது.
அதேபோன்று பங்களாதேஷ் அணியும் ஆரம்பத்தில் ஏழாமிடத்தில் காணப்பட்டது. தற்போது நடப்பு தொடரில் மூன்று வெற்றிகள், மூன்று தோல்விகளை சந்தித்துள்ளதன் காரணமாக 2 தரவரிசை புள்ளிகளை மேலதிகமாக பெற்று தொடர்ந்தும் ஏழாமிடத்தில் நீடிக்கின்றது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் எட்டாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 77 தரவரிசை புள்ளிகளுடன் காணப்பட்டது. இவ்வேளையில் இலங்கை அணி 76 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் காணப்பட்டது. ஆனால் நடப்பு உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணி இரண்டு வெற்றிகள், இரண்டு கைவிடப்பட்ட போட்டிகளை பதிவு செய்துள்ளதன் காரணமாக 2 தரவரிசை புள்ளிகளை மேலதிகமாக பெற்றுள்ளது.
இதன் காரணமாக தற்போது 78 தரவரிசை புள்ளிகள் பெற்று இலங்கை மேற்கிந்திய தீவுகளை பின்தள்ளி எட்டாமிடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி எந்தவிதமான தரவரிசை புள்ளிகளை இழக்காமல் இருந்தாலும், இலங்கை அணியின் முன்னேற்றத்தால் ஒன்பதாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
Photos : CWC19 – Sri Lanka training session ahead of South Africa match
நடப்பு உலகக்கிண்ண தொடரில் ஏழு தொடர்ச்சியான தோல்விகளை பதிவு செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 தரவரிசை புள்ளிகளை இழந்து தொடர்ந்தும் பத்தாமிடத்தில் நீடிக்கிறது.
புதிய ஐ.சி.சி ஒருநாள் அணிகளின் தரவரிசை (முதல் பத்து இடங்கள்)
- இந்தியா – 123 புள்ளிகள்
- இங்கிலாந்து – 122 புள்ளிகள்
- நியூசிலாந்து– 114 புள்ளிகள்
- அவுஸ்திரேலியா – 112 புள்ளிகள்
- தென்னாபிரிக்கா – 109 புள்ளிகள்
- பாகிஸ்தான் – 96 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 92 புள்ளிகள்
- இலங்கை – 78 புள்ளிகள்
- மேற்கிந்திய தீவுகள் – 77 புள்ளிகள்
- ஆப்கானிஸ்தான் – 60 புள்ளிகள்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க