உலக கிரிக்கட்டில் ஏற்படுத்தக்கூடிய பாரிய மாற்றங்கள் குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகிறது. இதன்படி, டெஸ்ட் கிரிக்கெட்டை மீள உயிரூட்டும் நடவடிக்கை குறித்து, அச்சபை கவனஞ்செலுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்சன், இது தொடர்பான தகவல்களை வழங்கினார்.
இதன்படி, டெஸ்ட் போட்டிகளில் 2 பிரிவுகள் ஏற்படுத்தப்படுவது குறித்து கவனஞ்செலுத்தப்படவுள்ளது. தற்போது ஆராயப்படும் முறையின்படி, தரப்படுத்தலில் முதல் 7 இடங்களில் காணப்படும் அணி, பிரிவு 1இல் இடம்பிடிக்கும். தற்போதுள்ள டெஸ்ட் தரப்படுத்தலில் 8, 9, 10ஆம் இடங்களைப் பெற்றுள்ள அணிகள், பிரிவு 2இல் விளையாட வேண்டியேற்படும்.
மீண்டும் ஒருமுறை அசத்தினார் மஹேல
தற்போதுள்ள தரப்படுத்தலின்படி, அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகியன, முதல் 7 இடங்களில் காணப்படுகின்றன. மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் ஆகியன, 8, 9ஆம் இடங்களில் காணப்படுகின்றன. சிம்பாப்வே அணி, போதியளவிலான போட்டிகளில் விளையாடாததால், தரப்படுத்தலுக்குள் நுழையவில்லை. இந்த முறை அறிமுகப்படுத்தப்படின், இந்த 3 அணிகளும், பிரிவு 2இல் விளையாட வேண்டியேற்படும்.
இவற்றுக்கு மேலதிகமாக, புதிய அணிகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்குவது பற்றியும் ஆராயப்படுகிறது. இதன்படி ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, நேபாளம் ஆகிய மூன்று நாடுகளும் டெஸ்ட் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.
திட்டமிட்டபடி அனைத்துமே இடம்பெறுமாயின், 2019ஆம் ஆண்டிலேயே, அணிகள், ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்கு தரமிறக்கப்படுவதும் தரமேற்றப்படுவதும் நடைபெறும். இரண்டு ஆண்டு காலப்பகுதியில், பிரிவு 1இல் இறுதி இடத்தைப் பெறும் அணி, பிரிவு 2க்குத் தரமிறக்கப்படுமென்பதோடு, பிரிவு 2இல் முதலிடம் பெறும் அணி, பிரிவு 1க்குத் தகுதிபெறும். இந்த யோசனைகள், இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு, அங்கிகரிப்பதா அல்லது நிராகரிப்பதாக என்ற முடிவு எடுக்கப்படும்.
டெஸ்ட் போட்டிகளுக்கு மேலதிகமாக, உலக இருபதுக்கு-20 தொடரை நடத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அடுத்த தொடர், 2020ஆம் ஆண்டே இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள போதிலும், 2018ஆம் ஆண்டில் தொடரொன்றை நடத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தத் தொடரை நடத்தும் வாய்ப்பு, இலங்கை, தென்னாபிரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வழங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்சன் தெரிவித்தார்.
எனினும், இத்தொடரை நடத்துவதா, இல்லையா என்ற முடிவு, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒளிபரப்பு உரிமைகளைக் கொண்டுள்ள ஸ்டார் நிறுவனத்தினாலேயே தீர்மானிக்கப்படவுள்ளது. அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டாலேயே, இந்தத் தொடர் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்