சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான சிறந்த T20I அணியில் இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க இடம்பிடித்துள்ளார்.
ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக பிரகாசித்துவரும் வீரர்களை கண்டறிந்து, வருடத்தின் சிறந்த அணியொன்றை பெயரிட்டு வருகின்றது.
>> சுபர் சிக்ஸ் சுற்றில் இந்தியாவிடம் வீழ்ந்த இலங்கை U19 அணி!
இந்தநிலையில் இம்முறை வெளியிடப்பட்டுள்ள ஐசிசியின் சிறந்த T20I அணியில் இலங்கை T20I அணியின் உப தலைவர் வனிந்து ஹஸரங்க பெயரிடப்பட்டுள்ளார். வனிந்து ஹஸரங்க கடந்த ஆண்டு 19 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதுமாத்திரமின்றி இலங்கை அணி ஆசியக்கிண்ணத்தை வெற்றிக்கொள்ள முக்கிய காரணமாக இருந்த இவர், 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்தார். வனிந்து ஹஸரங்க 2021ம் ஆண்டும் ஐசிசியின் சிறந்த T20I அணியில் இடம்பெற்றிருந்தார்.
இலங்கை அணி சார்பாக வனிந்து ஹஸரங்க மாத்திரம் ஐசிசியின் சிறந்த T20I அணியில் இடம்பெற்றுள்ளதுடன், இந்திய அணியைச் சேர்ந்த விராட் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களுடன் பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் ரவூப் மற்றும் மொஹமட் ரிஸ்வான், இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் (தலைவர்) மற்றும் செம் கரன், நியூசிலாந்து அணியின் கிளேன் பிலிப்ஸ், அயர்லாந்து அணியின் ஜோஸ் லிட்ல் மற்றும் ஜிம்பாப்வே அணியின் சிக்கண்டர் ரஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஐசிசியின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த T20I அணி
ஜோஸ் பட்லர் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், கிளேன் பிலிப்ஸ், சிக்கண்டர் ரஷா, ஹர்திக் பாண்டியா, செம் கரன், வனிந்து ஹஸரங்க, ஹரிஸ் ரவூப், ஜோஸ் லிட்ல்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<