UAE மற்றும் ஓமானுக்கு மாற்றப்பட்ட ICC T20I உலகக் கிண்ணம்

ICC Men’s T20 World Cup 2021

428
ICC

ஐசிசி T20I உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி முதல் நவம்பர் 14ம் திகதிவரை நடைபெறவுள்ளமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி T20I உலகக் கிண்ணம் இந்தியாவில் நடத்தப்பட திட்டமிட்டிருந்த போதும், கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

ரூட்டின் அரைச்சதத்துடன் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து

எவ்வாறாயினும், ஐசிசி T20I உலகக் கிண்ணத்தை இந்தியா நடத்தவுள்ளதுடன், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், அபு தாபி, சார்ஜா மற்றும் ஓமான் கிரிக்கெட் அக்கடமி மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இம்முறை நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணம் 2016ம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக நடைபெறவுள்ளது. இந்தியாவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற T20I உலகக் கிண்ணத்தில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, மேற்கிந்திய தீவுகள் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது.

தொடரின் முதல் சுற்றுப்போட்டிகளில் இலங்கை, பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, நம்பீபியா, ஓமான் மற்றும் பபுவா நியூகினியா அணிகள் மோதவுள்ளன. தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ளது.

தொடர் குறித்து ஐசிசியின் தற்காலிக பிரதம நிறைவேற்று அதிகாரி எல்லர்டைஸ் குறிப்பிடுகையில், 

T20I உலகக் கிண்ணத்தை பாதுகாப்பாக நடத்துவதே எமது முதல் குறிக்கோள். இந்தியாவில் இந்த தொடரை நடத்த முடியாமை ஏமாற்றமளிக்கிறது. பல அணிகள் மோதும் இந்த தொடரை உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் நடத்திமுடிக்க வேண்டும். இதுதொடர்பில் இந்தியா, ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபைகளுடன் கலந்துரையாடி வருகின்றோம். என்றார்.

இதேவேளை, T20I உலகக் கிண்ணம் தொடர்பில் இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா குறிப்பிடுகையில், 

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அமைய T20I உலகக் கிண்ணத்தை இந்தியாவில், நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவந்தோம். எனினும், நாட்டில் நிலவிய கொவிட்-19 தொற்று காரணமாக போட்டியை நடத்த முடியாமல் போய்விட்டது. குறிப்பாக இந்தியாவில்  போட்டியை நடத்துவது வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். எனவே, தொடரை ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தவுள்ளோம் என்றார்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…