T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து கிரிக்கெட் அணி, பபுவா நியூ கினியா அணியினை 7 விக்கெட்டுக்களால் தோற்கடித்து சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.
அதேநேரம், T20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளில் மூன்றாம் இடத்தினை அயர்லாந்து கிரிக்கெட் அணி நமீபிய கிரிக்கெட் அணியினை 27 ஓட்டங்களால் தோற்கடித்து பெற்றிருக்கின்றது.
ரெட் புல் பல்கலைக்கழக நடப்புச் சம்பியனான இலங்கை மூன்றாவது இடம்
ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் நடப்புச் சம்பியன்…
அடுத்த ஆண்டு (2020) அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும் மேலதிக ஆறு கிரிக்கெட் அணிகளையும் தெரிவு செய்யும் T20 கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் 14 அணிகளின் பங்குபற்றுதலுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றிருந்தது.
இறுதிப் போட்டி
T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற நெதர்லாந்து கிரிக்கெட் அணியும், பபுவா நியூ கினியா அணியும் இறுதிப் போட்டியில் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று (2) ஆரம்பமான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, பபுவா நியூ கினியா கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி அவ்வணி, 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. பபுவா நியூ கினியா அணியின் துடுப்பாட்டம் சார்பில் லேகா சியாக்கா 39 ஓட்டங்களுடன் தனது தரப்பில் அதிக ஓட்டங்கள் பெற்ற துடுப்பாட்டவீரராக மாறியிருந்தார்.
அதேநேரம், நெதர்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் பிரன்டன் குலோவர் 3 விக்கெட்டுக்களை சாய்க்க ரியோலப் வன் டர் மேர்வே மற்றும் டிம் வன் டர் குக்டேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 129 ஓட்டங்களை 19 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி, குறித்த வெற்றி இலக்கை 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களுடன் அடைந்தது.
நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் பென் கூப்பர் 41 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்ய, றயன் டென் டசஹட்டே உம் 34 ஓட்டங்களுடன் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தார்.
போட்டியின் ஆட்டநாயகனாக நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளரான ப்ரன்டன் குளோவர் தெரிவாகினார்.
போட்டியின் சுருக்கம்
பபுவா நியூ கினியா – 128/2 (20) லேக்கா சியக்கா 39, பிரன்டன் குளோவர் 24/3, ரியோலப் வன் டர் மேர்வே 15/2, டிம் வன் டர் குக்டேன் 18/2
நெதர்லாந்து – 134/3 (19) பென் கூப்பர் 41, றயன் டென் டசஹட்டே 34, அஸ்ஸாட் வாலா 15/1
முடிவு – நெதர்லாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி
அயர்லாந்து எதிர் நமீபியா
T20 கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியினை தழுவிய அயர்லாந்து கிரிக்கெட் அணியும், நமீபிய கிரிக்கெட் அணியும் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மோதின.
இப்போட்டியும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 135 ஓட்டங்களை பெற்றது.
அயர்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அன்ட்ரூ பல்ப்பிமே 35 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம், நமீபிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் கிரைக் வில்லியம்ஸ் மற்றும் JJ. ஸ்மிட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
T10 லீக் கிரிக்கெட் தொடரில் மற்றுமொரு இலங்கை வீரர்
இந்த மாதம் 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள…
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 136 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நமிபீய கிரிக்கெட் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 108 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.
நமீபிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் கெஹார்ட் எரஸ்மஸ் போராட்டமான ஆட்டம் காண்பித்து அரைச்சதம் பூர்த்தி செய்து 51 ஓட்டங்களை பெற்றிருக்க ஏனையோர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் சிமி சிங் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், மார்க் அடைர் மற்றும் கரேத் டேலானி ஆகியோர் 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பித்தக்கது.
போட்டியின் சுருக்கம்
அயர்லாந்து – 135 (19.1) அன்ட்ரூ பல்பைர்னி 46, JJ. ஸ்மிட் 19/3, கிரைக் வில்லியம்ஸ் 34/3
நமீபியா – 108 (18.2) கெரார்ட் எரஸ்மஸ் 51, சிமி சிங்க் 25/3, மார்க் அடைர் 9/2, கரேத் டேலானி 23/2
முடிவு – அயர்லாந்து 27 ஓட்டங்கள் வெற்றி
T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் தொடரில் அதன் இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் இடத்திற்கான போட்டி என்பவற்றில் ஆடிய அணிகளுடன் சேர்த்து ஸ்கொட்லாந்து மற்றும் ஓமான் ஆகிய அணிகளும் T20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றிருக்கின்றன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<