வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்குமா இலங்கை?

461

அவுஸ்திரேலியாவில் T20 உலகக் கிண்ணம் நடைபெற இன்னும் ஒரு நாள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் ஆசியக் கிண்ண T20 தொடரின் புதிய சம்பியன்களாக இருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியும், நமீபிய அணியும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

>> பாகிஸ்தானின் உலகக் கிண்ண அணியில் பகார் சமான்

அதன்படி மழை மேகங்களைக் கொண்டுள்ள கீலோங் நகரில் இலங்கை – நமீபியா அணிகள் இடையிலான உலகக் கிண்ண முதல் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகின்றது.

மழையின் ஆட்டமா?

வானிலைத் தரவுகள் போட்டி நடைபெறும் கீலோங் நகரில் பகல் நேரத்தில் மழை பெய்வதற்கு 50% சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கின்றது. அதாவது போட்டி நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

எனவே இலங்கை – நமீபிய அணிகள் இடையிலான போட்டி முழுமையாக நடைபெற மழையின் குறுக்கீடு இல்லாமல் இருக்க வேண்டும்.

இலங்கை

இம்முறை இரண்டாவது தடவையாக இலங்கை கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றினை கடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஏற்கனவே T20 உலகக் கிண்ணம், இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் என்பவற்றில் சம்பியன் பட்டம் வென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, T20 உலகக் கிண்ண அணித் தெரிவின் போது பங்களாதேஷ் அணி தசம புள்ளிகள் அடிப்படையில் T20 அணிகள் தரவரிசையில் முன்னிலை பெற்றதன் காரணமாக முதல் சுற்றில் விளையாடும் நிலைக்குச் சென்றிருக்கின்றது.

கடந்த காலங்களில் மோசமாக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி தற்போது தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவதனை அடுத்து, கிரிக்கெட் வல்லுனர்கள் இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் திருப்பங்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு அணியாக (Dark Horses) இருக்கும் என எதிர்வுகூறியிருக்கின்றனர்.

>> பாகிஸ்தானின் உலகக் கிண்ண அணியில் பகார் சமான்

தம்முடைய இரண்டாவது சம்பியன் பட்டத்திற்காக இம்முறை உலகக் கிண்ணத்தில் போட்டியிடும் இலங்கை அணிக்கு இந்த முறை பலம் கொடுக்க வனிந்து ஹஸரங்க மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோரின் சுழல்பந்துவீச்சு உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இதில் வனிந்து ஹஸரங்க இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுக்களை எடுக்க எதிர்பார்க்கப்படும் பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகின்றார்.

அத்துடன் அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணிக்கு துஷ்மன்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோரின் சேவைகள் மீண்டும் கிடைத்திருக்கின்றது. அத்துடன் டில்சான் மதுசங்கவும் மேலதிக வேகப்பந்துவீச்சாளராக இலங்கை கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்கின்றார். ஆனால் அவர் நமீபிய மோதலில் பங்கெடுப்பதில் சிறிது சந்தேகம் நிலவுகின்றது.

அணியின் துடுப்பாட்டத்தை நோக்கும் போது பானுக்க ராஜபக்ஷ, குசல் மெண்டிஸ், அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் பெதும் நிஸ்ஸங்க ஆகிய வீரர்கள் அணிக்கு நம்பிக்கை சேர்க்கின்றனர். இவர்களுக்கு மேலதிகமாக தனுஷ்க குணத்திலக்க, சரித் அசலன்க மற்றும் சாமிக்க கருணாரட்னவும் அணிக்கு மேலதிக பலமாக காணப்படுகின்றனர்.

நமீபியா

அங்கத்துவ நாடுகளில் ஒன்றாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்த போதும் 20 வருடங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சவால் கொடுக்கும் அணிகளில் ஒன்றாக நமீபியா மீண்டும் ஒரு உலகக் கிண்ணத்தில் களமிறங்கியிருக்கின்றது.

கடைசியாக இலங்கை – நமீபியா ஆகிய இரண்டு அணிகளும் T20 உலகக் கிண்ணத்தில் சந்தித்த போது அப்போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற போதும், நமீபிய அணியின் ஆட்டம் சவால் தரும் விதமாக இருந்ததனை அவதானிக்க முடியுமாக இருந்தது.

>> T20 உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணியில் புதிய வீரர்

அதே மாதிரியாக சவால் நிறைந்த ஆட்டத்தினை இம்முறையும் வெளிப்படுத்த அணித்தலைவர் கெர்ஹாட் எரஸ்மஸ், இடதுகை வேகப்பந்துவீச்சாளர் டான்கெனி லுங்காமெனி, அனுபவ வீரர் ஜேன் ப்ரைலிங் மற்றும் தென்னாபிரிக்க முன்னாள் வீரர் டேவிட் விசே ஆகியோர் ஒன்றிணைந்திருக்கின்றனர்.

இதேநேரம் இளம் துடுப்பாட்டவீரர் டிவான் லீ கொக், பிக்கி யா பிரான்ஸ் ஆகியோரும் அணிக்கு மேலும் நம்பிக்கை தரும் வீரர்களாக காணப்படுகின்றனர்.

அணிக் குழாம்கள்

இலங்கை – தசுன் ஷானக்க (தலைவர்), சரித் அசலன்க, தனுஷ்க குணத்திலக்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, சாமிக கருணாரட்ன, துஷ்மன்த சமீர, லஹிரு குமார, ப்ரமோத் மதுஷன், டில்ஷான் மதுசங்க, ஜெப்ரி வன்டர்செய்

நமீபியா – கெர்ஹாட் எரஸ்மஸ், டிவான் லா கொக், லோஹன் லோவ்ரேன்ஸ், ஸ்டேபன் பார்ட், மைக்கல் வான் லிங்கேன், ஷேன் கீரின், நிகோல் லொப்டி ஈடோன், டேவிட் விஸே, கார்ல் பிர்க்கென்ஸ்டோக், JJ ஸ்மிட், ஜேன் பிரைலிங், ருபேன் ட்ரம்பல்மென், பெர்னாட் ஸ்கோல்ட்ஷ், பிக்கி யா பிரான்ஸ், டான்கென்னி லூங்கமெனி, பென் சிகோன்கோ

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<