அவுஸ்திரேலியாவுடன் இலங்கை அணிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்

5693

T20 உலகக் கிண்ண குழு 1 இல் காணப்படும் இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான சுபர் 12 சுற்று மோதல் நாளை (25) அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு  ஆரம்பமாகவிருக்கின்றது.

>> T20 உலகக் கிண்ண ஹட்ரிக் நாயகர்கள்

கவனிக்க வேண்டியவை

வானிலைத் தரவுகள்

இலங்கை அணி விளையாடிய முன்னைய போட்டிகளிலும் (குறிப்பாக இலங்கை – அயர்லாந்து மோதல்) மழையின் குறுக்கீடு இருக்கும் என கூறப்பட்ட போதிலும் எந்த போட்டிகளிலும் மழையின் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கவில்லை.

அதேநேரம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் தகவல்கள் நாளை மேற்கு அவுஸ்திரேலியாவின் துறைமுக நகரமான பேர்த்தில் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் 10% மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கின்றது. இந்த செய்தி இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் இரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயமாக இருக்கின்றது.

பேர்த் ஆடுகளம்

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான போட்டி நடைபெறும் பேர்த் ஆடுகளம் 2018 இல் நிர்மாணம் செய்யப்பட்ட கிரிக்கெட் அரங்குகளில் ஒன்றாக இருக்கின்றது. இதனால் இந்த ஆடுகளத்தில் இதுவரை மூன்று T20I போட்டிகள் மாத்திரமே விளையாடப்பட்டிருக்கின்றன. இதில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்ற இந்த T20 உலகக் கிண்ணத்தின் சுபர் 12 சுற்றுப் போட்டியும் அடங்கும். இந்த மூன்று போட்டிகளிலும் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டிருந்த அணிகளே வெற்றிகளைப் பதிவு செய்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சேம் கர்ரன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருந்தமை இதற்கு சான்றாக இருக்கின்றது.

எனவே ஒப்பிட்டுரீதியில் அனுபவமும், ஆற்றல்களும் அதிகம் கொண்ட வேகப்பந்துவீச்சாளர்கள் இலங்கையை விட அவுஸ்திரேலிய அணியிடமே காணப்படுகின்றனர். இது பேர்த் ஆடுகளத்தில் ஏற்கனவே அவுஸ்திரேலிய அணி இலங்கையை விட ஒரு படி முன்னர் இருப்பதனை சுட்டிக்காட்டுகின்றது.

>. இலங்கையுடன் விளையாடிய அயர்லாந்து வீரருக்கு கொரோனா

சுழல்பந்துவீச்சு எதிர் வேகப்பந்துவீச்சு  

இலங்கை அணியினைப் பொறுத்தவரை இலங்கை அணியில் காணப்படும் வனிந்து ஹஸரங்க – மகீஷ் தீக்ஷன ஜோடி ஏற்கனவே தொடரில் முக்கியமான சுழல்பந்துவீச்சாளர்களாக மாறிவிட்டனர். இதில் வனிந்து ஹஸரங்க தொடரில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் இருக்கின்றார்.

இந்த இரண்டு சுழல் வீரர்களும் இலங்கை அணிக்கு முக்கியமாக இருப்பது போல், இரண்டு உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களை அவுஸ்திரேலிய அணியும் கொண்டிருக்கின்றது. அதில் முதல் வீரராக இருப்பவர் ஜோஸ் ஹேசல்வூட். T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இவர் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம் என இரண்டு தொடர்களிலும் நடைபெற்ற T20 போட்டிகளில் இலங்கைத் துடுப்பாட்டவீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்திருந்தார். எனவே இவரின் ஆதிக்கமும் இலங்கைக்கு எதிரான போட்டியில் இருக்கும். அதேநேரம் இலங்கை வீரர்களுக்கு நெருக்கடி தரும் மற்றைய வேகப்பந்துவீச்சாளராக பேட் கம்மின்ஸ் இருக்கப் போகின்றார். பேட் கம்மின்ஸ் கடைசியாக தான் விளையாடிய 8 T20I போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சுப் பிரதியினை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவர்களுக்கு மேலதிகமாக அத்துடன் அதீத வேகத்தின் மூலம் துடுப்பாட்டவீரர்களை திணறடிக்கும் மிச்சல் ஸ்டார்க்கின் உதவியும் அவுஸ்திரேலிய அணிக்கு உண்டு.

இந்த விடயங்கள் நாளைய போட்டி இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்களுக்கும், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் இடையிலான போராக இருக்கும் என்பதனை உணர்த்திக் காட்டுகின்றன.

இலங்கை அணி

இலங்கை இந்த T20 உலகக் கிண்ணத்தில் நமீபியா, ஐக்கிய அரபு இராச்சியம், நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து என  முன்னதாக கத்துக்குட்டி அணிகளுடனான போட்டிகளிலேயே மோதியிருந்தது. இந்தப் போட்டிகளில் இலங்கை அணி அயர்லாந்து எதிரான போட்டி தவிர மற்றைய போட்டிகளில் சிறிய தடுமாற்றத்துடன் ஆடியது என்றே கூற முடியும். இதில் நமீபியாவுடன் அதிர்ச்சி தோல்வியும் அடைந்திருந்தது. ஆனால் இலங்கை அணி அடுத்ததாக எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா அவ்வாறான கத்துக்குட்டி அணிகளில் ஒன்று அல்ல. T20 உலகக் கிண்ணத்தின் நடப்புச் சம்பியனாக இருக்கும் அவ்வணி அனைத்து துறைகளிலும் திறமையாக செயற்படக் கூடிய வீரர்களை கொண்டிருக்கின்றது. எனவே இலங்கை அணிக்கு அவுஸ்திரேலிய அணியுடனான போட்டி முன்னைய போட்டிகள் போல் அல்லாது பாரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

>> விராட் கோலி அபாரம்; த்ரில் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா

சுபர் 12 சுற்றில் ஏற்கனவே முதல் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை அணியின் குழாம் தொடர்பில் பார்க்கும் போது நாளைய போட்டியில் பெதும் நிஸ்ஸங்க மற்றும் ப்ரமோத் மதுசான் ஆகிய வீரர்கள் மீண்டும் குழாத்திற்குள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை அணி உபாதைக்குள்ளாகும் வீரர்களைக் கருத்திற் கொண்டு முன்னெச்செரிக்கையாக இலங்கையில் இருந்து நிரோஷன் டிக்வெல்ல, அசித பெர்னாண்டோ மற்றும் மதீஷ பத்திரன ஆகியோரை அழைத்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எனவே இருக்கும் வீரர்களைக் கொண்டு ஒரு சமநிலையான குழாம் நாளைய போட்டியில் களமிறக்க எதிர்பார்க்கப்பட முடியும்.

எதிர்பார்ப்பு XI – தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, ப்ரமோத் மதுசான்

அவுஸ்திரேலிய அணி

இந்த T20 உலகக் கிண்ணத்தில்  நியூசிலாந்துக்கு எதிராக தாம் விளையாடிய முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்த அவுஸ்திரேலியா நிகர ஓட்ட வித்தியாசத்திலும் (NRR) பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. கடைசியாக இலங்கையுடன் விளையாடிய 5 T20I போட்டிகளில் மூன்று போட்டிகளில் அவ்வணி வெற்றி பெற்ற போதும் NRR மூலம் கிடைத்திருக்கும் அழுத்தம் காரணமாக இலங்கை அணியுடனான போட்டிகளில் அவர்கள் தவறுகளை செய்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றது.

மறுமுனையில் அவுஸ்திரேலிய துடுப்பாட்டவீரர்கள் சுழல்பந்துவீச்சினை எந்தளவிற்கு வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. ஏற்கனவே நியூசிலாந்து மோதலில் மிச்சல் சான்ட்டரினை அவர்கள் முகம் கொள்ள தடுமாறியது அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை ஒப்பிட்டு அளவில் குழு 1 இல் இருக்கும் மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களை அவுஸ்திரேலியத் துடுப்பாட்டவீரர்களுக்கு நாளைய போட்டியில் முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. எனவே சீரான திட்டங்கள் இல்லாத போது நிச்சயம் போட்டி எதிரணியான இலங்கையின் பக்கம் செல்லும்.

>> இலங்கை வீரர்கள் சிறந்த மனநிலையுடன் உள்ளனர் – மஹேல ஜயவர்தன

அணியின் நம்பிக்கைக்குரிய துடுப்பாட்டவீரர்களாக டேவிட் வோர்னர் மற்றும் அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆகியோர் காணப்பட, மத்திய வரிசையில் கிளன் மெக்ஸ்வெல், டிம் டேவிட் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோரும் அணிக்கு மேலதிக பலமாக இருக்கின்றனர்.

பந்துவீச்சினை பார்க்கும் போது முன்னர் குறிப்பிட்டதனைப் போன்று பேட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசல்வூட், மிச்சல் ஸ்டார்க் ஆகியோருடன் இணைந்து சுழல்பந்துவீச்சாளர் அடம் ஷம்பா ஆகியோர் அணிக்கு நம்பிக்கை தருகின்றார்.

எதிர்பார்ப்பு XI – டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (தலைவர்), மிச்சல் மார்ஷ், கிளன் மெக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டிம் டேவிட், மெதிவ் வேட், பேட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், அடம் ஷம்பா, ஜோஸ் ஹேசல்வூட்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<